Skip to main content

சதுரங்க வேட்டை பட பாணி... ரூபாய் ஐந்து லட்சம் மோசடி... திமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

Published on 06/02/2020 | Edited on 06/02/2020


 

திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்தவர் சாமிநாதன். சந்தையில் ஆடு விற்பனை செய்யும் ஏஜெண்டாக இருந்து வருகிறார்.
 

 இவரிடம் திருப்பூரை சேர்ந்த மூன்று பேர் கோபுர கலசத்தில் வைக்கும் இரிடியம் தங்களிடம் இருக்கிறது. அதை வீட்டில் வைத்தால் வசதி வாய்ப்புகள் குவியும், நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று சதுரங்கவேட்டை பட பாணியில் ஆசைவார்த்தை கூறி உள்ளனர். 

 

tirupur


 

இரிடியம் வேண்டுமென்றால் ரூபாய் 25 லட்சம் கொடுக்க வேண்டும். முன்பணமாக ரூபாய் 5 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியதை நம்பிய சாமிநாதன் ஐந்து லட்சத்தை முன்பணமாக மூன்று பேரிடம் கொடுத்துள்ளார். 
 

இந்த நிலையில் சாமிநாதனிடம் பணம் வாங்கியவர்கள் ஒரு காரில் பெரியநாயக்கன்பாளையம் வந்துள்ளனர். சாமிநாதனுக்கு போன் செய்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரிடியம் தற்போது கையில் இருப்பதாகவும், உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் வந்து மீது ரூ.20 லட்சத்தை தருமாறு சாமிநாதனிடம் கேட்டுள்ளனர். 
 

நேரில் வந்த சாமிநாதனுக்கு அவர்கள் நடவடிக்கையில் சந்தேகம் வர உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் போலீசில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து காரில் இருந்த மூன்று பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரிடியம் என்று கூறி ஏமாற்றிய வெள்ளி குடத்தை பறிமுதல் செய்தனர். அந்த குடத்தில் ஆற்று மணல் நிரப்பி அவர்கள் வைத்து இருந்தது தெரியவந்தது. 


 

மேலும் விசாரணையில் அவர்கள் திருப்பூர் குமாரசாமி நகரை சேர்ந்த ஆறுமுகம் என்கிற பந்தா ஆறுமுகம், சோமனூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் தனபால், திருப்பூர் குமாரசாமி நகரைச் சேர்ந்த ராஜா என்பதும் தெரியவந்தது.
 

 இதில் ஆறுமுகத்துக்கு சொந்தமான கார் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் திருப்பூரில் திமுக விவசாயிகள் பிரிவு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். மேலும் கைதான 3 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்