Skip to main content

ரயில் பெட்டியில் கிடந்த மர்ம பையில் 5 கிலோ கஞ்சா; போலீசார் விசாரணை

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

5 kg of Cannabis in a mysterious bag found in the train carriage; Police investigation!

 

சேலம் வழியாக வந்த ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து 5 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

 

சேலம் வழியாக திங்கள்கிழமை (செப். 5) காலை வந்த தன்பாத் & ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலில் சேலம் ரயில்வே காவல்துறை தனிப்படை எஸ்.ஐ. பாலமுருகன் தலைமையில் காவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து ஏறிய அவர்கள், சேலம் ரயில்நிலையம் வரும் வரை அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்தினர். இந்த ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடந்தது. 

 

முன்பதிவு செய்யப்படாத ஒரு ரயில் பெட்டியில் சோதனை செய்தபோது, அங்கு கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அதைத் திறந்து பார்த்தபோது அதில் 3 பொட்டலங்களில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அந்தப் பையைக் கொண்டு வந்த பயணிகள் குறித்து விசாரித்தபோது, தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. காவல்துறையினர் வருவதைப் பார்த்ததும் கஞ்சா கடத்தல் ஆசாமிகள் தப்பிச்சென்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் கஞ்சாவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

அதே பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சாக்கு மூட்டையில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட 5 கிலோ புகையிலை பொருள்கள் இருந்தன. அவற்றையும் கைப்பற்றினர். இந்த சாக்குமூட்டையைக் கொண்டு வந்த மர்ம நபரும் காவல்துறையினரைப் பார்த்ததும் தப்பிச்சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்