Skip to main content

பல்லடத்தில் மதுவால் நிகழ்ந்த 4 படுகொலை; எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கண்டனம்

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

'4 caused by alcohol in Palladam; Edappadi Palaniswami condemned

 

திருப்பூரில், 'வீட்டு வாசலில் ஏன் மது குடிக்கிறீர்கள்' எனத் தட்டிக் கேட்ட தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 மாவட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளகிணறு என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் செந்தில்குமார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரும் நேற்று இரவு வீட்டு வாசலின் அருகே மது அருந்த வந்த வெங்கடேசன் என்பவரிடம் இங்கு மது அருந்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர். வெங்கடேசன் உடன் மது அருந்த வந்து இரண்டு பேரிடமும் இந்த பகுதியில் மது அருந்தக்கூடாது எனத் தெரிவித்தனர். இதனால் நடந்த வாக்குவாதத்தில் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள், செந்தில்குமார் உள்ளிட்ட தட்டிக் கேட்ட நான்கு பேரையும் வெட்டிப் படுகொலை செய்தனர்.

 

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நான்கு பேரின் உடல்களும் பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக நேற்று இரவு கொண்டுவரப்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள குளிரூட்டும் பெட்டி பழுதடைந்துள்ளதால் உடனடியாக நான்கு பேர் உடலுக்கும் பிரேதப் பரிசோதனை செய்ய முடியவில்லை. இன்று காலை தான் பிரேதப் பரிசோதனை நடைபெற உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க கோவை, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட போலீசார் பல்லடம் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் சாலை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்த மூன்று நபர்களையும் கைது செய்தால் மட்டுமே உடல்களை வாங்குவோம் என நேற்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் தற்போது பிரேதப் பரிசோதனை நடைபெறும் மருத்துவமனையின் முன் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

nn

 

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி இது குறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், 'கள்ளக் கிணறு பகுதியில் நான்கு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். திமுக அரசு பதவியேற்றதில் இருந்து தமிழகத்தில் நாள்தோறும் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து வருகிறது. காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களை காப்பாற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையால் இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பென்சில் வாங்க வந்த சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்; மளிகைக் கடை முதியவருக்கு சிறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Cruelty meted out to a girl who came to buy a pencil; Jail for grocery shop old man

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் 62 வயதான சிவா. இவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் சிவாவின் கடைக்கு சென்று பென்சில் வாங்கியுள்ளார். அப்பொழுது சிறுமியை அழைத்துச் சென்ற சிவா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து அச்சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.