Skip to main content

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரிப்பு; 3 வாலிபர்களிடம் என்ஐஏ போலீசார் விசாரிக்க முடிவு!

Published on 05/08/2022 | Edited on 05/08/2022

 

NIA Decide to inquire who arrested in salem

 

சேலத்தில், யூடியூப் சேனலை பார்த்து துப்பாக்கிகள் தயாரித்ததாக பிடிபட்ட மூன்று வாலிபர்களிடமும் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் புளியம்பட்டி பகுதியில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மே மாதம் டி.எஸ்.பி சங்கீதா தலைமையில் காவல்துறையினர், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த ஒரு பையில் கைத்துப்பாக்கி உள்பட இரண்டு துப்பாக்கிகள், முகமூடிகள், துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் ஆகியவை இருந்தன. 

 

காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்ததோடு, இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் பிரகாஷ் (24), எருமாபாளையத்தைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி (25) என்பது தெரியவந்தது. இவர்களில் சஞ்சய் பிரகாஷ், பி.இ., பட்டதாரி என்பதும், நவீன் சக்கரவர்த்தி பி.சி.ஏ., பட்டதாரி என்பதும், இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. 

 

இவர்கள், சேலம் செட்டிச்சாவடி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, துப்பாக்கிகளை தயாரித்து வந்துள்ளனர். அந்த வீட்டில் நடந்த சோதனையில், துப்பாக்கிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மரக்கட்டைகள், இரும்பு குழாய்கள், வெல்டிங் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக அழகாபுரம் பெரிய புதூரைச் சேர்ந்த கபிலன் (25) என்ற இளைஞரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பிடிபட்ட மூன்று பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 


இது ஒருபுறம் இருக்க, மூன்று பேரிடமும் கியூ பிரிவு காவல் ஆய்வாளர் கோகிலா தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா? துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டதன் நோக்கம் குறித்து விசாரணை நடந்தது. விசாரணையின்போது அவர்கள், இயற்கையை பாதுகாக்கவும், வன உயிரினங்கள், பறவைகளை காக்கவும் போராடுகிறோம் என்றும், இயற்கைக்கு எதிராக செயல்படுவோர் மீது கோபம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காக புதிதாக இயக்கத்தை கட்டியெழுப்ப உள்ளதாகவும் கூறியுள்ளனர். துப்பாக்கிகளை, யூடியூப் பார்த்து தயாரித்ததாகவும் கூறியுள்ளனர். 


இந்நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) எடுத்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. என்.ஐ.ஏ. பிரிவில் இருந்து 5 காவல்துறை உயர் அதிகாரிகள் வியாழக்கிழமை (ஆக. 4) சேலம் வந்தனர். முதல்கட்டமாக, பிடிபட்ட மூவர் குறித்த அடிப்படை தகவல்களை உள்ளூர் காவல்துறை மற்றும் கியூ பிரிவு தரப்பில் விசாரித்துள்ளனர். விரைவில், சேலம் சிறையில் இருந்து மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்