
வேலூரில் காணாமல் போன 3 வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வரை மர்மம் நீடித்து வருகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள் தரணி-பிரியா தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் ஜெயப்பிரியா என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த 28/01/2025 அன்று வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தை திடீரென காணாமல் போனது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது நடைபெற்று வந்தது. தொடர்ந்து குழந்தை காணாமல் போன நாளில் இருந்து மூன்றாவது நாள் (31/01/2025) வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாழடைந்த வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குழந்தையின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உடனடியாக மீட்கப்பட்ட உடல் வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
குழந்தை உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தை காணாமல் போன அடுத்த நாளே காவல்துறையினரும் குழந்தையின் உறவினர்களும் சம்பந்தப்பட்ட அந்த கிணற்றில் ஆய்வு செய்தனர். அப்பொழுது குழந்தை இல்லை ஆனால், மூன்று நாட்களுக்கு பிறகு இன்று அந்த கிணற்றில் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மூன்று வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் நடந்து 50 நாட்களை கடந்த நிலையிலும் தற்போது வரை துப்புதுலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.