கடலூரில் 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் முன்புறம் 8 அடி கொண்ட கழிவு நீர் தொட்டி கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதியதாக கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கழிவுநீர் தொட்டியின் கான்கிரீட்டை பிரிப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். கான்கிரீட்டை பிரிப்பதற்காக வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி(40), கொத்தனார் பாலச்சந்திரன்(32) மற்றும் தலைவாசல் பகுதியை சேர்ந்த சக்திவேல்(22) ஆகிய 3 பேரும் புதிய கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். இறங்கிய 10 நிமிடத்திற்குள்ளாகவே விஷவாயு தாக்கி, மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கொத்தனார் பாலச்சந்திரனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.
புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி வேலை பார்க்க சென்ற 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.