Skip to main content

ஒடிந்த 3 லட்சம் பலா மரங்கள்;நிலைகுலையும் புதுக்கோட்டை விவசாயிகள்!!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018

கீரமங்கலம், வடகாடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கஜா புயலின் தாக்கத்தால் சுமார் 3 லட்சம் பலா மரங்கள் முற்றிலும் ஒடிந்து நாசமானதால் தங்களில் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

 

trees

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கமல், வடகாடு, மாங்காடு, அணவயல், நெடுவாசல், புள்ளாண்விடுதி, செரியலூர், சேந்தன்குடி, நகரம், பனங்குளம், குளமங்கலம், நெய்வத்தளி, மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள சுமார் 100 கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு  முன்புவரை வழக்கமான விவசாயங்களே செய்யப்பட்டு வந்தது. 

 

அதன் பிறகு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியதால் பலன் தரும் மரங்கள் வளர்ப்பை தொடங்கினார்கள் விவசாயிகள். அந்த வகையில் தான் முதலில் வாழை பயிரிடத் தொடங்கிய விவசாயிகள் வரப்பு ஓரங்கள், மற்றும் தோட்டங்களில் பலாக் மரக்கன்றுகளை வைத்து வளர்க்கத் தொடங்கினார்கள். அதேபோல தென்னை கன்றுகளும் நடப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் மற்ற பயிர் விவசாயங்களை நிறுத்திவிட்டு மரங்களை மட்டுமே கவனிக்கத் தொடங்கினார்கள். 

 

trees

 

அந்த வகையில் ஒரு ஏக்கர் விவசாயநிலத்தில் தென்னை, பலா, எழுமிச்சை, மிளகு என்று ஊடுபயிர்களும் வளர்க்கப்பட்டு வந்தது. அதனால் கீரமங்கலம் மற்றும் வடகாடு சுற்றுவட்டார கிராமங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பலா மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தது.

கீரமங்கமலம், வடகாடு சுற்றியுள்ள கிராமங்களில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 100 டன் வரை பலா பழங்கள் உற்பத்தியானது. இங்கு உற்பத்தியாகும் பலா பழங்கள் தமிழகம் மட்டுமின்றி மும்பை போன்ற பல்வேறு மாநிலங்களுக்கும்  ஏற்றுமதி செய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தை தானே புயல் தாக்கிய போது அந்தப் பகுதியில் பலா மரங்கள் சேதமடைந்ததால் அவர்கள் ஏற்றுமதி செய்த பகுதிகளுக்கும் கீரமங்கலம் பலாப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. 

 

கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு பகுதி பலா பழங்களின் சுளை நிறமும், சுவையும் அதிகமாக இருப்பதால் சென்னை கோயம்பேடு முதல் பல்வேறு பேருந்து நிலையங்களிலும் வடகாடு பலா என்று சொல்லி வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். எட்டுக்குடி முருகன் கோயில் திருவிழாவிற்கு மட்டும் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு பகுதியில் இருந்து சுமார் 300 டன் வரை பலாப் பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் இப்படி ஒரு மகசூலையும், விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தையும் தந்த பலா மரங்கள் சாய்ந்து கிடப்பது அப்பகுதி விவசாயிகளின் வாழவதாரத்தையும் சாய்த்தது என்றே கூறலாம்.  

 

 

புள்ளாண்விடுதி விவசாயி அம்மாக்கண்ணு கூறும் போது.. 

 

எனக்கு தென்னையும், வாழையும், பலாவும், சோளமும் விவசாயம் செய்திருந்தேன். இப்ப அத்தனையும் அழிந்துவிட்டது. தென்னை, பலாவை நம்பி வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிக்கிறேன். ஒவ்வொரு வருடமும் பலா மரங்களில் காய்க்கும் காய்களை மட்டும் பறித்துக் கொள்ள வியாபாரிகள் வந்து முன்பணம் கொடுத்து விவசாயிகளிடம் வாங்கிச் செல்வார்கள். பல விவசாயிகள் தங்கள் மரங்களில் விளையும் பலாப் பழங்களை தாங்களே பறித்து கமிசன் கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள். இதனால் பலஆயிரம் பேருக்கு வேலையும் கிடைத்தது. ஆனால் இப்போது மரங்கள் அத்தனையும் ஒடிந்து நாசமானதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிட்டது. 

 

 

மறுபடியும் விவசாயிகள் பழைய நிலைக்கு வரப ல ஆண்டுகள் ஆகலாம். வாங்கிய கடனை எப்படி கட்டுவது என்பது தெரியாமல் திகைத்து நிற்கிறோம் என்றவர்.. தற்போது புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மரங்களும் கணக்கெடுத்து நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் தற்போது தென்னை மரங்களை மட்டும் கணக்கெடுக்கிறார்கள். பலா மரங்களை கணக்கெடுக்கவில்லை. அதற்கு வேறு அதிகாரி வரனுமாம். அவர்கள் எப்ப வந்து கணக்கெடுக்கிறது. நாங்கள் தோட்டங்களை எப்ப சுத்தம் செய்றது. ஒரே அதிகாரி அனைத்து மரங்களையும் கணக்கெடுக்க வேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்