கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அலசநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பர்கத் (30). இவரும், இவரது நண்பர்களான ஆவலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சிவா (27) என்பவரும், பார்வதி நகரைச் சேர்ந்த பிரகாஷ் (30) என்பவரும் கூட்டு சேர்ந்து வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மூவர் மீதும் ஓசூர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருந்த பிரகாஷ் நேற்று முன் தினம் (19-12-23) விடுதலையானார். அவரை, சிவாவும், பர்கத்தும் சேலத்தில் இருந்து காரில் ஓசூருக்கு அழைத்து வந்தனர். பிரகாஷின் பகுதியான பார்வதி நகரைச் அவர்கள் சென்றதும், அப்போது திடீரென வந்த மர்ம கும்பல், அவர்கள் மூவரையும் சுற்றி வளைத்து ஆயுதங்களால் தாக்க முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட அவர்கள் மூன்று பேரும் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றனர்.
ஆனால், அதற்குள் அந்த கும்பல் சிவாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். அதோடு நின்றுவிடாமல், சிவாவின் தலையை வெட்டி அந்த தெருவில் வீசினர். இதைப்பார்த்து உயிர் பிழைக்க நினைத்த பிரகாஷும், பர்கத்தும் பிரகாஷின் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி கொண்டனர். ஆனால், கொலைவெறி அடங்காத அந்த கும்பல் வீட்டு கதவு, ஜன்னல் மற்றும் மேற்கூரை ஆகியவற்றை உடைத்து வீட்டிற்குள் சென்று பர்கத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதில், அங்கிருந்த பிரகாஷ், அந்த கும்பலிடம் இருந்து தப்பி அருகில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று உயிர் தப்பினார். இதையடுத்து, அந்த மர்ம கும்பல் அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்த இரட்டை கொலைச் சம்பவத்தை அறிந்த ஓசூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற காவல்துறையினர், கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த பர்கத், சிவா ஆகியோரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தப்பியோடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.