Skip to main content

கனமழை எதிரொலி; 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாக ரத்து

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
2 express trains completely cancelled

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல்லை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நெல்லை - செங்கோட்டை, நெல்லை - நாகர்கோவில், நெல்லை - திருச்செந்தூர் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாஞ்சி மணியாச்சி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் இன்று இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எதிரொலி காரணமாக இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் - திருச்சி, திருச்செந்தூர் - எழும்பூர் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரியில் கடல் பகுதியில் காற்று வேகமாக வீசுவதால் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகு சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடல் காலநிலை சீரானதும் சேவை மீண்டும் தொடங்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.