லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட ஊத்தங்கரை காவல் ஆய்வாளரின் வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்து 190 பவுன் நகைகள், 19 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை ஊழல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம், பேக்கரி கடை உரிமையாளரிடம் 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, அவரை ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதையடுத்து, ஊழல் ஒ-ழிப்புப்பிரிவு காவல்துறையினர் அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தினர். சொத்து ஆவணங்கள் சிலவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், அவருடைய வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தபோது, பாதுகாப்புப் பெட்டகத்தில் 19 லட்சம் ரூபாய் ரொக்கம், மற்றும் 190 பவுன் நகைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றுக்கு முறையான கணக்கு ஆவணங்கள் ஏதுமில்லை. இதையடுத்து ஊழல் ஒழிப்புப்பிரிவினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.
பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகைகளுக்கு முறையான கணக்கு ஆவணங்கள் உள்ளனவா? என்பது குறித்து நடராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அல்லது அவையும் லஞ்சமாகப் பெற்ற பணத்தில் இருந்து வாங்கப்பட்டவையா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
கைதான நடராஜன், ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி, ஏற்காடு, மல்லூர் ஆகிய காவல்நிலையங்களில் பணியாற்றி வந்தார். அப்போது யாரிடமாவது லஞ்சம் வாங்கினாரா? அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் யார் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.