விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழி சாலையில் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச் சாவடியில் டிசம்பர் 23ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. இதனையறிந்த பல்வேறு அமைப்புகள், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் நலச் சங்கத்தினர் சாலை பணி முழுமையாக முடிவடையாத நிலையில் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது, மேலும் கட்டண விகிதம் அதிகமாக உள்ளது இதை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று டிசம்பர் 23ஆம் தேதி சிதம்பரம் கடலூருக்கு செல்லும் தனியார் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் நலச் சங்க செயலாளர் தேசிங்கு ராஜன் கூறுகையில், 'கொத்தட்டை சுங்க சாவடியில் 50 முறை சென்றால் ஒரு மாத கட்டணம் 14,090 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வட்டார போக்குவரத்து அதிகாரி நிர்ணயித்த கால நேர அட்டவணை படி ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை சட்டப்படி பேருந்துகளை இயக்கலாம் என அறிவித்து பல இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகை ஐந்து நாட்களில் கட்டணம் முடிந்துவிடும். எனவே கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட சிதம்பரம் கடலூர் செல்லும் தனியார் பேருந்துகள் சுங்கச் சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' எனக் கூறினார்.
மேலும் இது குறித்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகவும், சரியான முடிவு பேச்சுவார்த்தையில் எட்டவில்லை என்றால் கிராம மக்கள், 4 சக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.