Skip to main content

ஹெலிகாப்டரில் பணம் இருந்ததா? - குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை விளக்கம்

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

Was there money in the helicopter? Annamalai explanation for the accusation

 

கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாஜகவில் இருந்து பல மூத்த தலைவர்கள் விலகி காங்கிரஸில் இணைந்து வரும் நிலையில் தற்போது கர்நாடக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலை மீது புதிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

 

கர்நாடக பாஜக தேர்தல் பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். சமீபத்தில் தேர்தல் பணிக்காக கர்நாடகத்தில் உள்ள உடுப்பி மாகாணத்திற்கு அண்ணாமலை ஹெலிகாப்டரில் வந்தார். பெரும்பாலும் காரில் பயணிக்கும் அவர் உடுப்பி மாவட்டத்திற்கு ஹெலிகாப்டரில் வந்தது பல சர்ச்சைகளையும் பல கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கர்நாடகத் தேர்தலுக்காக அண்ணாமலை ஹெலிகாப்டரில் பையில் அதிகளவு பணம் கொண்டு வந்துள்ளார் என உடுப்பி மாவட்டத்தில் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வினய்குமார் கூறினார். இக்குற்றச்சாட்டு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

உடுப்பி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் வந்தபோது அதில் பைகளில் கோடிக்கணக்கில் பணம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கர்நாடக வாக்காளர்களுக்கு விரைவில் பட்டுவாடா செய்யப்படலாம். மேலும் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும்’ அவர் கூறினார்.

 

இந்நிலையில், கர்நாடகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “எல்லாரையும் அவர்களைப் போலவே கருதுகிறார்கள். நான் சமானியன். எங்களுடைய கொள்கை வேறு, அவர்களது கொள்கை வேறு. கால விரயத்தை குறைப்பதற்காகவே ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன். எங்கள் வெற்றி உறுதியானதால் தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்” எனக் கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்