Skip to main content

திமுக கூட்டத்தில் அதிமுக பெண் நிர்வாகி ரகளை... அமைச்சரை எச்சரித்த ஸ்டாலின் 

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

wwww

 

கோவை மாவட்டம் தேவராயபுரத்தில் நடந்த திமுக கிராமசபைக் கூட்டத்தில், அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. 

 

கோவை தொண்டாமுத்தூரில் ஸ்டாலின் பங்கேற்ற கிராமசபை கூட்டம் நடந்தது. அதில் திடீரென்று எழுந்து பேசிய ஒரு பெண்ணிடம், “நீங்க எந்த ஊரும்மா?” எனக் கேட்டார் ஸ்டாலின். உடனே அந்தப் பெண், “எந்த ஊருன்னு கூடத் தெரியாம எதுக்கு கிராம சபை கூட்டம்” என ஒருமையில் பேசினார்.

 

உடனே கோபமான கட்சியினர், அந்தப் பெண்ணை வெளியேறுமாறு கூறினர். அப்போது அந்தப் பெண், ஸ்டாலினுக்கு எதிராக கோஷமிட்டார். உடனே போலீஸ் அந்தப் பெண்ணை அங்கிருந்து மீட்டுச் சென்றது. அந்தப் பெண்ணின் பெயர் வி. பூங்கொடி. அதிமுகவின் மாநில மகளிரணி துணைத் தலைவராக இருக்கிறார். வாளையார் ரோடு சுகுணாபுரத்தில் பூங்கொடியின் வீடு இருக்கிறது. 

 

ddd

 

கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் தொண்டாமுத்தூர் வரை வந்திருக்கிறார் எனத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து  கிராம சபை கூட்டத்தின் நிறைவில் திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார். 

 

ssss

 

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “கிராம சபைக் கூட்டத்தின் இடையில் ஒரு சகோதரி் கலவரம் செய்ய முயன்றார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த காரியத்தைச் செய்திருக்கிறார்.

 

நேற்றே எனக்கு இந்தத் தகவல் தெரியும், எப்படியும் அ.தி.மு.க.வினர் இடையூறு செய்வார்கள் என எதிர்பார்த்ததுதான். நீங்கள் ஒரு கூட்டத்தில் இப்படி செய்யலாம். இது தொடர்ந்தால் அ.தி.மு.க.வின் எந்தக் கூட்டத்தையும் நாங்கள் நடத்தவிட மாட்டோம். இது கட்டுபாடு உள்ள இயக்கம். அதனால்தான் அவரைச் சரியாக கண்டுபிடித்து எந்தப் பிரச்சனையும் தடையும் இல்லாமல் அவரை வெளியே அனுப்பிவிட்டோம். 

 

அமைச்சர் வேலுமணி இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்தால் நீங்கள் மட்டுமல்ல, உங்கள் முதல்வரும் எந்தக் கூட்டத்திலும் பேச முடியாது. தி.மு.க. தொப்பி அணிந்துகொண்டு வந்து தி.மு.க. பெயரில் அ.தி.மு.க.வினர் கலவரம் ஏற்படுத்த முயல்கின்றனர். தைரியம் இருந்தால் அ.தி.மு.க. என்றே சொல்லி இதில் கலந்திருக்க வேண்டும்” என்றார். 

 

கூட்டத்திற்கு வெளியே வந்த அந்தப் பெண்ணிடம், ஒருவர் ‘அமைச்சர் பேசுகிறார்’ என செல்போனைக் கொடுக்கிறார். அந்த செல்போனை வாங்கி அந்தப் பெண் பேசும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.