Skip to main content

இந்த ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால்தான்... நிர்வாகிகளுக்கு திமுக, அதிமுக அதிரடி உத்தரவு

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

 

ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதேபோல் அதிமுக வேட்பாளராக ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும்தான் அதிமுக வெற்றி பெற்றது. பாராளுமன்றத் தேர்தலுன் இணைந்து காலியாக இருந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்ததால் அதிமுக, ஆட்சியை காப்பாற்றுவதற்காக இடைத்தேர்தலில் அதிக கவனம் செலுத்தியது, ஆகையால்தான் பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது என்று அதிமுகவினர் கூறிவந்தனர். 
 

edappadi palanisamy


 

இந்த நிலையில் வேலூர் அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களிடம், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரப் பணிகள் இருந்தது. அமமுக என தனியாக பிரிந்து செயல்பட்டனர். இப்போது அமமுகவில் இருந்து பலர் நம்மிடம் வந்துவிட்டனர். மேலும் அமமுக போட்டியிடவில்லை. வேலூர் பகுதியைச் சேர்ந்த முகமதுஜானை ராஜ்யசபா எம்.பி.யாக்கியிருக்கிறோம். இந்த தொகுதியில் பாமகவுக்கும் செல்வாக்கு இருப்பதால் அன்புமணியை ராஜ்யசபா எம்.பி.யாக்கியிருக்கிறோம். இந்த ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால்தான் அதிமுகவின் செல்வாக்கு சரியவில்லை என்பதை காட்ட முடியும். ஆகையால் இந்த ஒரு தொகுதியில் அதிக கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாராம். மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். நிச்சயமாக அவர் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார். 

 

mkstalin


 

இதனிடையே, 37 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை நாம் கொண்டாடினோம். அதேபோல் வேலூரிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக இருக்கக்கூடாது. வேலூரில் வாய்ப்பை தவறவிட்டுவிட்டோம் என்றால் 37 இடங்களில் வெற்றி பெற்றது அர்த்தமில்லாமல் போய்விடும் என கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாம் திமுக தலைமை. 


 

அதுமட்டுமல்லாமல் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களாக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஜெயத்ரட்சகன் மற்றும் ஆர்.காந்தி, நந்தகுமார், முத்தமிழ்செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 60க்கும் அதிமுகமானவர்களை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொன்முடி, ஜெ.அன்பழகன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, செந்தில்பாலாஜி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டடோரும் தேர்தல் பணி பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 



 

இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி திங்கள்கிழமை வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் குறித்து ஆலோசிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. அந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலளார்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரச்சார யுக்தி, வெற்றி வியூகம், வாக்காளர்களை சந்தித்து எவ்வாறு வாக்குகள் கேட்பது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்