Skip to main content

திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்பது எம்ஜிஆரின் கனவு...: -அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி

Published on 19/08/2020 | Edited on 19/08/2020
Vellamandi N. Natarajan

 

 

திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டுமென்ற எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார்.

 

திருச்சி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் விலையில்லா முகக் கவசம் வழங்கும் விழா திருச்சி அமராவதி கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு விலையில்லா முகக் கவசம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 நியாய விலைக் கடைகளில் 8 லட்சத்து 14 ஆயிரம் குடும்ப அட்டைகள் மூலம் 25 லட்சத்து 82 ஆயிரம் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு வீதம் 50 லட்சம் எண்ணிக்கையிலான முகக்கவசங்கள் தமிழக அரசால் விலையின்றி வழங்கப்பட உள்ளது. ஒரு வார காலத்திற்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  முகக்கவசம் வழங்கப்பட்டுவிடும் என்றார்.

 

திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டுமென்பது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவுத் திட்டம்.

 

திருச்சியில் அனைத்து வளங்களும் உள்ளது. எம்.ஜி.ஆர் திருச்சியை இரண்டாவது தலைநகராக ஆக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் அப்போது உடல் நல குறைவு காரணமாக மறைந்து விட்டார். அதனால் அந்த திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது. தற்போது மீண்டும் தமிழகத்தில் இரண்டாவது தலைநகரம் என்கிற கோரிக்கை எழுந்தால் திருச்சியை தான் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றார்.

 

கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது திருச்சியை சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சியை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்