Skip to main content

"கூடுவிட்டு கூடு பாய்கிறது திமுக" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

tn assembly election campaign cm edappadi palaniswami speech


தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (19/03/2021) பிற்பகல் 03.00 மணிக்கு நிறைவடைந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

 

இதனிடையே, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

அதன் தொடர்ச்சியாக, அரியலூர் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. விவசாயப் பணியில் இருந்து படிப்படியாக உயர்ந்து வருகிறேன்; தற்போது நீங்கள் தந்த பதவி முதல்வர். மக்களவைத் தேர்தலில் பல பொய்களைக் கூறினார் ஸ்டாலின்; தற்போது மக்கள் விவரமாக உள்ளனர். தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி. ஸ்டாலின் போட்ட வேஷங்கள் எல்லாம் கலைந்துவிட்டன; மரியாதைத் தெரிந்த கட்சி அ.தி.மு.க.வும். அதன் கூட்டணிக் கட்சிகளும். தி.மு.க.வில் மூத்த தலைவர்களை ஓரம் கட்டவே உதயநிதியை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளார் ஸ்டாலின்" என விமர்சித்தார்.

 

அதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரனை ஆதரித்து வாக்குச் சேகரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "கூட்டணி விஷயத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் எனக் கூடுவிட்டு கூடு பாய்கிறது தி.மு.க. 10 ஆண்டுகள் வனவாசத்தில் இருந்தும் தி.மு.க. திருந்தவில்லை. ஸ்டாலின் முதல்வர் கனவில் இருக்கிறார்; ஆனால் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. அடிமையாக இல்லை. திட்டங்களைக் கொண்டு வர இணக்கமாக இருக்கிறோம். அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஆண்டிற்கு 6 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ரூபாய் 1,500 வழங்கப்படும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு கிராமப் புறங்களில் அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்