Skip to main content

'சட்டமேலவை, பூரண மதுவிலக்கு, விவசாயத்திற்காக தனி பட்ஜெட்...' - பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!

Published on 22/03/2021 | Edited on 22/03/2021

 


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் 'தொலைநோக்கு பத்திரம்- 2021' என்ற பெயரில் வெளியிட்டார், மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை, அமைச்சர் நிதின் கட்கரி.

 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, "பயோ எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பதே பா.ஜ.க.வின் நோக்கம். நாட்டின் எரிபொருள் தேவையை விவசாயிகள் பூர்த்தி செய்யும் நிலை உருவாகும். அரிசி, நெல். கரும்பு உள்ளிட்ட பொருட்களில் இருந்து எத்தனால் உருவாக்க வேண்டும். 'சாகர்மாலா' திட்டத்திற்குப் பின் இந்திய எல்லையில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம்" என்றார்.  

 

பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் தமிழகத் தேர்தல் மேலிட இணை பொறுப்பாளரும், மத்திய இணையமைச்சருமான வி.கே.சிங், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, கட்சியின் நிர்வாகிகள் காயத்ரி ரகுராம், நமீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள்; '50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகளைப் போல மீனவர்களுக்கும் வருடாந்திர உதவித்தொகை ரூபாய் 6,000 வழங்கப்படும். 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு முற்றிலுமாக ஆற்றுப்படுகைகளில் மண் அள்ளுவது தடை செய்யப்படும். இந்துக் கோயில்களின் நிர்வாகம், தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். அதிக நிதி ஒதுக்கீடு செய்து விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். சென்னை மாநகராட்சி மூன்று மாநகராட்சிகளாகப் பிரிக்கப்படும். தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை கொண்டு வரப்படும். வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு பல்நோக்கு மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும்' உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

 

பா.ஜ.க.வின் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை 32 பக்கங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்