Skip to main content

தமிழக அரசின் அறிவிப்பு சமூகநீதிக்கு எதிரானது! - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

 anbumani ramadoss

 

பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி 40 வயதைக் கடந்தவர்களுக்கு இனி ஆசிரியர் பணி வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. லட்சக்கணக்கானவர்களின் ஆசிரியர் பணி கனவைக் கலைக்கும் இந்த அறிவிப்பு மிகவும் அநீதியானது.

 

தமிழக அரசின் இந்த ஆணையை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் வயது வரம்பு நிர்ணயிக்கப்படாத ஒரே பணி ஆசிரியர் பணி மட்டும் தான். ஒருவர் ஓராண்டு பணி நிறைவு செய்யும் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் கடந்த 30 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரே நிபந்தனை ஆகும். அதன்படி ஆசிரியர் பணிக்கு தகுதிபெற்ற ஒருவர் அவரது 57-ஆவது வயதில் கூட பணியில் சேர முடியும். தமிழ்நாட்டில் ஓய்வுபெறும் வயது 59-ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது 58-ஆக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். மாறாக 40-ஆக குறைக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.

 

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்குத் தேவையான குறைந்தபட்சக் கல்வி பெற்றவர்கள் 7.12 லட்சம் பேர் ஆவர். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி இடைநிலை ஆசிரியர் பணிக்கு 1,66,543 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3,14,152 பேர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2,31,501 பேர் என மொத்தம் 7,12,196 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தவிர இன்னும் சில லட்சம் பேர் பதிவு செய்வதற்காகக் காத்திருக்கின்றனர். இவர்களில் சில லட்சம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கின்றனர். இவர்களில் 40 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள். இட ஒதுக்கீட்டு வகுப்பினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டிருந்தாலும் கூட, அதையும் கடந்து ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றுள்ள லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர். அதற்கு அரசு காரணமாக இருக்கக் கூடாது.

 

மத்திய அரசின் சார்பிலும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பிலும் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்பதற்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒருவர் 55 வயதிலும் கூட ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்; ஆனால், அதில் அவர் தேர்ச்சி பெற்றாலும் கூட ஆசிரியர் ஆக முடியாது என்பது முரண்பாடுகளின் உச்சம் அல்லவா? தமிழ்நாட்டில் 2013-ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 80,000 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறாத நிலையில், அவர்களால் பணியில் சேர முடியவில்லை.

 

அதற்குள் அவர்களின் 7 ஆண்டு தகுதிக்காலம் முடிவடைந்து விட்டது. இப்போது அவர்கள் மீண்டும் தகுதித்தேர்வு எழுதிதான் ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற முடியும் என்று அரசு அறிவித்துவிட்டது. அவர்களில் பெரும்பான்மையினர் 40 வயதைக் கடந்தவர்கள் எனும் நிலையில், அவர்கள் மீண்டும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும் கூட அவர்களால் ஆசிரியர் பணியில் சேர முடியாது. அவர்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில், கொள்கை முடிவு என்ற பெயரில் அவர்களை தண்டிப்பது எவ்வகையில் நியாயம்?

 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 7,500 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட 12,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதன்படி, அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆசிரியர் நியமனம் இருக்காது எனும் நிலையில், இப்போது 35 வயதைக் கடந்த எவருக்கும் இனி ஆசிரியர் பணி கிடைக்காது. ஆண்டுதோறும் தொடர்ச்சியாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்வது சமூகநீதிக்கு எதிரான செயல் ஆகும். 

 

Ad

 

ஆசிரியர் பணிக்கு வயது வரம்பை நீக்குவது எந்த வகையிலும் தகுதி குறைவு இல்லை. ஒருவர்  50 வயதில் ஆசிரியர் பணியில் சேருகிறார் என்றால், அதுவரை அவர் பணியில் இல்லாமல் இருந்தார் என்று பொருள் அல்ல. மாறாக, அதுவரை அவர் குறைந்த ஊதியத்தில் தனியார் பள்ளியில் பணியாற்றி வந்திருப்பார். அப்படிப்பட்டவரை நியமிக்கும் போது, அவரது அனுபவம் கற்பித்தலுக்கு கூடுதல் தகுதியாக  இருக்குமே தவிர, தகுதிக் குறைவாக இருக்காது. இவற்றையெல்லாம் கடந்து ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு இல்லை என்று கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்த நடைமுறையை இப்போது அவசர அவசரமாக மாற்ற வேண்டிய தேவை எதுவும் இல்லை. இதைத் தமிழக அரசு உணர வேண்டும்.

 

அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 வயது உச்சவரம்பு என்ற தமிழக அரசின் ஆணை செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களில் ஆசிரியர் பணி கனவு சிதைக்கப் படும். எனவே, ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற்று, இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.