Skip to main content

வாக்களிப்பதை கவுரவமாக கருதும் நாளே உண்மையான ஜனநாயகம் மலரும் நாள்! ராமதாஸ்

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

 

தேர்தலில் வாக்களிப்பதை சுமையாக கருதாமல் கவுரவமாக நினைக்கும் நிலை உருவாக வேண்டும். அந்த நாள் தான் உண்மையான ஜனநாயகம் தழைக்கும் நாளாக அமையும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 38 தொகுதிகளிலும் சராசரியாக 71.90 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒப்பீட்டளவில் இது மனநிறைவளிக்கும் எண்ணிக்கை தான் என்றாலும் கூட, நான்கில் ஒரு பங்குக்கும் கூடுதலான வாக்காளர்கள் தங்களின் விலைமதிப்பற்ற வாக்குரிமையை செலுத்தத் தவறியதை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயலாக பார்க்க முடியவில்லை.


 

Ramadoss



தமிழகத்தில் மொத்தமுள்ள 38 தொகுதிகளில் தருமபுரி, நாமக்கல், கரூர், சிதம்பரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், பெரம்பலூர், ஆரணி, கள்ளக்குறிச்சி, அரக்கோணம், தேனி, விழுப்புரம், சேலம், திண்டுக்கல், கடலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 23 தொகுதிகளில் சராசரிக்கும் கூடுதலாக, அதாவது 71.90%-க்கும் கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளன. ஊரகப் பகுதிகளை அதிகம் கொண்ட இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகமாக இருப்பது கிராமப்புற மக்களிடம் வாக்களிக்கும் ஆர்வமும், துடிப்பும் அதிகமாக இருப்பதை உறுதி செய்கிறது. 

 

அதேநேரத்தில் வாக்குப்பதிவு மிகவும் குறைவாக உள்ள தொகுதிகள் பட்டியலில் தென் சென்னை, மத்திய சென்னை, திருப்பெரும்புதூர், வட சென்னை ஆகிய தொகுதிகள் முன்னணியில் உள்ளன. இவற்றில் தென் சென்னையிலும், மத்திய சென்னையிலும் முறையே 56.34%, 58.69% என்ற அளவில் தான் வாக்குகள் பதிவாகியுள்ளன. இவை பாதிக்கும் சற்று அதிகம் என்பதிலிருந்தே கிட்டத்தட்ட பாதி வாக்காளர்கள் ஜனநாயகக் கடமையாற்றவில்லை என்பதை உணரலாம். திருப்பெரும்புதூர், வட சென்னை ஆகியவை 60 விழுக்காட்டைத் தட்டுத்தடுமாறி கடந்துள்ளன. இவை அனைத்தும் சென்னை பெருநகர எல்லைக்குள் உள்ள தொகுதிகளாகும். அதேபோல், கோவை (63.00%), மதுரை (65.83%) ஆகிய மாநகரத் தொகுதிகளிலும்,  குறைந்த  வாக்குகள் பதிவாகியிருப்பது பெருமைப்படக்கூடிய விஷயமல்ல.

 

இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒரே மாதிரியாகத் தான் வரி வசூலிக்கப்படுகிறது. அதேநேரத்தில் குடிநீர், சாலைகள், மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகளைப் பார்க்கும் போது ஊரகப் பகுதிகளை விட நகர்ப்புற பகுதிகளுக்குத் தான் அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்கப் படுகிறது. வசதிகளை அனுபவிக்காத ஊரக மக்கள் அதிக அளவில் வாக்களிக்கும் போது, அதிநவீன வசதிகளை அனுபவிக்கும் நகர்ப்புறவாசிகளில் பெரும்பான்மையினர் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாததும், தேர்தல் காலத்தில் கிடைக்கும் விடுமுறையை பயன்படுத்திக்கொண்டு சுற்றுலா உள்ளிட்ட கொண்டாட்டங்களை அனுபவிப்பதும் சரியா? என்பதை அவர்களின் மனசாட்சி தான் தீர்மானிக்க வேண்டும்.
 

தேர்தலில் வாக்களிக்காதவர்கள் தங்களின் செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது. ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்தும், மக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்தும் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் புரட்சியாளர்கள், வெயிலுக்குக் கூட வாக்குச்சாவடி பக்கம் ஒதுங்காதது தான் முரண்பாடுகளின் உச்சம் ஆகும். எந்த அரசியல் கட்சியையும்  தங்களுக்குப் பிடிக்கவில்லை; அதனால் தான் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறி அவர்கள் தப்பித்துக்கொள்ள முயலலாம். ஆனால், அது சரியான பதில் இல்லை என்பதை அவர்களே அறிவார்கள். 
 

அரசியல் கட்சிகளிலும், வேட்பாளர்களிலும்  ஒருவரைக் கூட பிடிக்கவில்லை என்பது தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் செயல் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. ஒருவேளை அவர்களை எந்தக் கட்சியும், எந்த வேட்பாளரும் கவரவில்லை என்றாலும் கூட, அதை வெளிப்படுத்துவதற்காகவே ‘நோட்டா’ என்ற புதிய வாய்ப்பு உள்ளது. அதைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு என்ன தயக்கமோ?
 

மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி ஆகும். மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியை 100% மக்களும் இணைந்து தேர்ந்தெடுக்காவிட்டால் அது முழுமையான ஜனநாயகமாக  இருக்காது. ஜனநாயகம் நமக்கு அளித்திருக்கும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கும் நாம், இன்னும் கூடுதலான உரிமைகளைக் கோரும் நாம் வாக்குகளை செலுத்துவதற்கு மட்டும் மறுப்பது மிகப்பெரிய கடமை தவறுதலாகவே பார்க்கப்பட வேண்டும். 100 வயதைக் கடந்த மூத்த குடிமக்களும், நகரவே முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளும் அடுத்தவர்களின் உதவியுடன் சென்று வாக்களிக்கும் போது, நாம் வாக்களிக்காமல் இருந்தது சரியா? என்ற வினாவை இந்தத் தேர்தலில் வாக்களிக்காதவர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொண்டால், தாங்கள் செய்தது மன்னிக்க முடியாத ஜனநாயகக் குற்றம் என்ற உண்மை அவர்களுக்கு புரியும். அது அவர்களை மாற்ற வேண்டும்.
 

இந்தியாவில் மட்டும் தான் இந்த நிலைமை என்றில்லை... உலகின் பல நாடுகளில் இதே நிலைமை தான் காணப்படுகிறது. உலகின் வளர்ச்சியடைந்த நாடான அமெரிக்காவில் 1968-ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று வரையிலான 50 ஆண்டுகளில் நடந்த அனைத்து அதிபர் தேர்தல்களிலும் 60%க்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இங்கிலாந்தில் 1950-களில் 85% ஆக இருந்த சராசரி வாக்குப்பதிவு இப்போது 65% ஆக குறைந்து விட்டது. அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவில் அனைத்து தேர்தல்களிலும் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான வாக்குகள் பதிவாகின்றன. இதற்குக் காரணம் அங்கு தேர்தலில் வாக்களிக்கத் தவறுவது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டு, 20 ஆஸ்திரேலிய டாலர் அபராதம், அரசு வேலைவாய்ப்பு மறுப்பு உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படுவது தான்.
 

வாக்களிக்கத் தவறுவது குற்றம் என்ற சட்டம் 1777-ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் ஜார்ஜியா மாகானத்தில் நடைமுறைக்கு வந்து விட்டது. உலகில் 11 ஜனநாயக நாடுகள் உட்பட மொத்தம் 38 நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது அல்லது இருந்திருக்கிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் வாக்களிக்கத் தவறுவது  குற்றமாக கருதப்பட்டு, பல வகைகளில் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. அதேபோல், இந்தியாவிலும்  வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம் பெயர்ந்து வாழும் இந்தியா போன்ற நாட்டில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை என்ற குரல்கள் எழுகின்றன. அதில் ஓரளவு உண்மை இருந்தாலும்,  நாட்டின் எந்தப் பகுதியிலும் வாக்களிக்கலாம் என்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் இதை சாத்தியமாக்க முடியும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இம்மாற்றங்களை எளிதாக செய்ய முடியும்.



 

இந்திய ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அதற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகளில் வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்கலாம். இத்தகைய சூழலில் இந்தியாவில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது குறித்த பொது விவாதத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும். அதேநேரத்தில் தேர்தலில் வாக்களிப்பதை சுமையாக கருதாமல் கவுரவமாக நினைக்கும்  நிலை உருவாக வேண்டும். அந்த நாள் தான் உண்மையான ஜனநாயகம் தழைக்கும் நாளாக அமையும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்