Skip to main content

“வந்துடுறேன்.. வெயிட் அண்ட் சீ..” - ஈரோட்டில் சீமான்

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

Seeman campaign in Erode East by-election

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர். 

 

நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சின்னங்கள் முறையாக கட்சி வேட்பாளர்களுக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. தற்போது மொத்தம் 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “பிபிசி ஆவணப்படத்தை அவர்கள் எடுத்தார்கள் என்பதற்காக பிபிசி அலுவலகத்தில் இன்று ரெய்டு. மோடியால் முடிந்தது, மிரட்டி பார்க்கிறார். நான் கூடத்தான் பேசுகிறேன். நான் கூடத்தான் திரையிட்டேன். என் வீட்டில் ஒரு ரெய்டு விடுங்களேன். 

 

‘ஊழல், லஞ்சம் பெறுபவர்கள் மீது இறைவனின் சாபம் உண்டாக’ என நபிகள் நாயகம் சொல்கிறார். நீங்கள் ஊழல், லஞ்சம் பெறுகிறீர்கள் எனச் சொல்லவில்லை. லஞ்சம் பெறுகிற திமுக, அதிமுகவிற்கு வாக்குகள் செலுத்தினாலும் இறைவனின் சாபம் உண்டாகும். உதயசூரியனுக்குத்தான் வாக்குகளை போட்டுவிட்டீர்களே. புதிதாகவா போடப்போகிறீர்கள். விடுதலை பெற்ற இந்தியாவை 50 ஆண்டுகள் ஆண்டு ஒன்றும் இல்லாமல் ஆக்கியது அந்த கை சின்னம் தான். சிஏஏ, என்ஆர்சி, ஜிஎஸ்டி என அனைத்தையும் கொண்டு வந்தது இந்த சின்னம் தான். அதற்கு உடன் நின்றது திமுக.

 

பேனாவை உடைப்பியா சீமான் எனக் கேட்கிறார்கள். உடைப்பேன். நீங்கள் அதிகாரத்தில் அங்கு பேனா வைத்தால் அந்த அதிகாரம் எனக்கு வரும் பொழுது என் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இருக்காது” எனக் கூறினார். 

 

இதனிடையே சீமான் பேசிக்கொண்டு இருந்தபோது குழந்தை சீமானை அழைத்த சத்தம் கேட்டது. அந்த குழந்தைக்கு பதில் அளித்த சீமான், “பேசிட்டு வந்துடுறேன். கொஞ்ச நேரம் நில்லுண்ணே. வந்து விடுகிறேன். வெயிட் அண்ட் சீ” எனக் கூறி பேச்சை தொடர்ந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்