சிறையிலிருந்து, தான் விடுதலையாவது தொடர்பான எந்த ஒரு தகவல்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மூன்றாம் நபருக்கு வழங்கக் கூடாது என பெங்களூரு சிறைத்துறைக்கு சூப்பிரடெண்ட்டுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில், கடந்த 2017 பிப்ரவரியில் சிறைக்குச் சென்ற சசிகலாவின் சிறைவாசம் 2021, ஜனவரியில் முடிவடையவுள்ளது. சசிகலா சிறையில் இருந்து எப்போது வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடத்தில் உள்ளது. மேலும் சசிகலா சிறையில் இருந்து வெளியேறுவது தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவது தொடர்பான எந்த ஒரு தகவல்களையும் ஆர்.டி.ஐ மூலம் வழங்கக் கூடாது என பெங்களூரு சிறைத்துறை உயரதிகாரிக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தன்னை விடுதலை செய்யும் தேதி தொடர்பாக அறிந்துகொள்ள பலரும் சிறைத்துறைக்கு தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பதிவு செய்துள்ளதை நான் அறிவேன். அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவும் விளம்பரம் தேடுவதற்காகவுமே, தான் சிறையில் இருந்து விடுதலையாகும் தேதி குறித்து கோரியுள்ளனர். ஆனால் தனிமனித ரகசியம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. எனவே தனது விடுதலை தொடர்பான செய்திகள் தனது அனுமதியின்றி மற்றவர்களுக்கு வழக்கப்படக்கூடாது.
சிறைத்துறையிடம் கேட்டுக்கொள்வது என்னவெனில், தான் விடுதலையாகும் தேதி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அது தொடர்பான தகவல்களை வழங்கக்கூடாது" என தெரிவித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள அந்தக் கடிதம் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது.