Skip to main content

டிசம்பர் 4ஆம் தேதி திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

Published on 29/11/2018 | Edited on 29/11/2018
dmk



கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் துவங்கியது. காங்கிரஸ், மதிமுக, விசிக, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. 
 

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தக் கூட்டத்தினுடைய தொடக்கத்தில் அண்மையில் கஜா புயலினால் உயிரிழந்து இருக்கக்கூடிய தோழர்களுக்கு, விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய வகையில் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று எங்களுடைய அஞ்சலியை நாங்கள் செலுத்தி இருக்கிறோம். 
 

அதைத் தொடர்ந்து, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உடனடியாக தமிழக சட்டமன்றத்தினுடைய சிறப்புக் கூட்டத்தை, மாநில அரசு கூட்டி ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் வருகின்ற டிசம்பர் மாதம் 4-ம் தேதி திருச்சி மாநகரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கக்கூடிய வகையில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கிறோம்.

 

நியாயமாக இந்த ஆர்ப்பாட்டத்தை டெல்டா பகுதியில் தான் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் டெல்டா பகுதியில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய சூழ்நிலை அனைவருக்கும் தெரியும். எனவேதான் திருச்சியை தேர்ந்தெடுத்து இருக்கிறோம். அந்த திருச்சியும் டெல்டாவுக்குள் வருகிறது. எனவே, அந்த திருச்சியிலே ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கிறோம் . எனவே அங்கே நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி பேதங்களை மறந்து, கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் பங்கேற்க வேண்டும். அந்த டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய மக்களும் குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற எல்லாக் கட்சித் தலைவர்களும் அதிலே பங்கேற்க இருக்கிறார்கள். அரசியலை மறந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு யார் வேண்டுமானாலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கலாம் என்றார். 

 

முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் மிச்சமிருக்கும் விவசாயத்தையும் அழித்தொழித்து, குடிநீர் சேகரிப்பதற்காக ஏற்கனவே தாய்மார்கள் அனுபவித்து வரும் துன்பங்களைப் பன்மடங்கு பெருக்கிடும் வகையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக் கொள்கிறது.
 

5,912 கோடி ரூபாய் மதிப்பில் 66 டி.எம்.சி. காவிரி நீரை தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதும், அதன் மூலம் அம்மாநிலத்தின் விவசாய நிலப்பரப்புகளை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொள்ளத்  திட்டமிடுவதும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கும் - அந்த இறுதித்  தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றத்  தீர்ப்பிற்கும் முற்றிலும் எதிரானது. காவிரி விவகாரத்தில் தொடக்கம் முதலே நீதிமன்றங்களின் தீர்ப்புகளைச் சிறிதும் மதிக்காமலும் அவற்றிற்கு எதிராகவும் தன்னிச்சையாகச் செயல்பட்டு வரும் கர்நாடக மாநில அரசு, தமிழகத்தின்  கருத்தினைக்  கேட்காமல்  புதிய  அணை  கட்டுவது,  இரு மாநிலங்களின் நெடுங்கால நல்லுறவிற்கும் கூட்டாட்சிக் கொள்கைக்கும் குந்தகம் விளைவிக்கும் முயற்சி என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் எடுத்துக் காட்ட விரும்புகிறது.

 

dmk


 

“தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீர் குறையும் விதத்தில், கர்நாடகம் புதிய அணைகளைக் கட்டக் கூடாது என்றும், தமிழக விவசாயிகளின் பாசனத் தேவைகளை பாதிக்கும் விதத்தில் கர்நாடகம் தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடாது” என்றும் நடுவர் மன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு முற்றிலும் விரோதமாக கர்நாடக அரசு செயல்படுவது சட்டத்தின் ஆட்சியை அறவே மதிக்காத போக்கு என்றும், தமிழக மக்களின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பல்வேறு மெகா கூட்டு குடிநீர்த்  திட்டங்களைச்  செயலிழக்க வைக்கும் உள்நோக்கம் கொண்ட அப்பட்டமான கெடு முயற்சி என்றும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கருதுகிறது.
 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், தமிழகத்தில் உள்ள அனைத்துக்  கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கட்சி பேதம் கருதாமல் பொதுநலனுக்காக ஒன்றிணைந்து, பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது.
 

அதுமட்டுமன்றி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஏகோபித்த உணர்வுகளையும் - ஏழரைக் கோடி தமிழக மக்களின் உணர்வுகளையும் உதாசீனப்படுத்திவிட்டு,  தேர்தல் ஆதாயம் ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு “நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் அல்லது தமிழகம் புதிய அணை எதுவும் கட்டக்கூடாது.  காவிரி விவகாரத்தில் அனைத்து  முடிவுகளையும் வாரியமே எடுக்கும். மத்திய அரசுக்கு இதில் தலையிடும் அதிகாரம் கிடையாது” என்றும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக,  கர்நாடகாவில் புதிய அணை கட்ட மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கியிருப்பது, தமிழகத்தை வஞ்சிக்கும் சூழ்ச்சியாகும்.
 

மத்திய அரசின் இந்த அனுமதி,  காவிரி டெல்டா பகுதியை   பாலைவனமாக்கி, கார்ப்பரேட்டுகளின் பெட்ரோலியப் பொருள்கள் வேட்டையை ஊக்கப்படுத்தி, தமிழகத்தின் வேளாண் பொருளாதார முன்னேற்றத்தைத் தரைமட்டமாக்கிப் புதைத்துவிடும்  படுபயங்கர  வஞ்சக நடவடிக்கையின் பிரதிபலிப்பே ஆகும்.

 

dmk


 

“கடிதம்” எழுதி விட்டாலே “கடமை” முடிந்து விட்டது என்று அ.தி.மு.க. அரசு,  அலட்சியத்தின் மொத்த உருவமாக இருந்ததால்தான் இன்றைக்கு, மத்திய அரசு  விளைவுகளைப் பற்றிய சரியான மதிப்பீடும் பார்வையும் இல்லாமல், இந்த அனுமதியை சர்வ சாதாரணமாக வழங்கி தமிழக மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது; வெந்தணலில் தள்ளுகிறது. மாநில உரிமைகளை - மத்திய அரசிடமும், அண்டை மாநிலங்களிடமும் அ.தி.மு.க. அரசு பறிகொடுத்துக் கொண்டிருப்பது தமிழக விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தீராத தொல்லையாகவும், தீர்க்க முடியாத வாழ்வாதாரப் பிரச்சினையாகவும் மாறும் பேரிடர் உருவாகி வருகிறது. அடிக்கடி மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் சந்திக்கும் அமைச்சர்களும், முதலமைச்சரும் “மாநில நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்” என்று அறிவித்தாலும், மேகதாது அணை கட்டுவதற்கான மத்திய அரசு அனுமதியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வேதனையுடன் பதிவு செய்து, தங்கள் சுயநலத்தைத் தவிர,  மாநிலத்தின் பொதுநலன் பற்றிக்  கவலையில்லை என்ற போக்கில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு தமிழகத்திற்குப் பெருந்தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது என்று ஆழ்ந்த கவலை கொள்கிறது.
 

எனவே, மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் “விரிவான திட்ட மதிப்பீட்டறிக்கை” தயாரிப்பதற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இது போன்று தன்விருப்பம் போல் புதிய அணை கட்டி தமிழகத்தின் விவசாயத்தையும், குடிநீர்த் தேவையையும்  வஞ்சிக்கும் முயற்சிகளில் கர்நாடக மாநில அரசு ஈடுபடக் கூடாது எனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
 

அதிமுக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி  இந்த அனுமதியை ரத்து செய்ய  தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

dmk


அதுமட்டுமல்லாமல், நடைபெறவிருக்கின்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்தைப் பாதிக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி இந்த அனுமதியை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வற்புறுத்த வேண்டுமென அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
 

மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி வருகின்ற 2018 டிசம்பர் 4ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி மாநகரில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

2000-க்கும் மேல் ஆபாச வீடியோக்கள்? பென் டிரைவ் முழுவதும் பெண்கள்; சிக்கிய பாஜக கூட்டணி வேட்பாளர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Controversial BJP alliance candidate and devegowda grandson for Over 2000 videos?

கர்நாடகா மாநிலத்தில், நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி ஆகியோரைத் தொடர்ந்து தேவகவுடா பேரன்கள் நிகில் குமாரசாமி, பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோரும் தீவிர அரசியலில் உள்ளனர். இவர்களில், ஹாசன் தொகுதியில் எம்.பியாக உள்ள பிரஜ்வால் ரேவண்ணா, இந்த முறை பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டார். இவர், தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணாவின் மூத்த மகனும் ஆவார். 

இதனால், இவர் போட்டியிடும் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் தீவிர பரப்புரை நடைபெற்று முதற்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஆனால், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 300-க்கும் அதிகமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. அதுவும், ஹாசன் தொகுதி வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் அத்தொகுதி முழுவதும் வாட்ஸ் அப்களில் வலம் வந்தன. இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், அரசுத் துறையைச் சேர்ந்த சில பெண் அதிகாரிகளும் ஆபாச வீடியோவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, சமூக ஊடகங்களிலும் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ பரவ இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனிடையே, அம்மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, அந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் எக்ஸ் பக்கத்தில், ‘பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வீடியோ கிளிப்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. கர்நாடக மாநில மகளிர் ஆணையம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கர்நாடகவின் ஹோலநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவின் கீழ் பிரஜ்வல் ரேவண்ணாவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஜே.டி.எஸ் கட்சியின் ஹாசன் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. ஆபாச வீடியோ விவகாரம் மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரில் இருந்து ஜெர்மனுக்கு தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த கையோடு பிரஜ்வல் ரேவண்ணா புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆதரவாளர்கள் அந்த ஆபாச வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டது என கூறி வருகின்றனர். பதிலுக்கு, பிரஜ்வல் ரேவண்ணாவும் தனது புகழைக் கெடுக்கும் நோக்கில் ஆபாச வீடியோக்கள் பரப்பப்படுவதாக புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Controversial BJP alliance candidate and devegowda grandson for Over 2000 videos?

ஆனால், பாஜக தரப்பு பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறிவருவது சந்தேகத்தை கிளப்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வேண்டும் என போராட்டமும் நடைபெற்று வருகிறது. முன்னதாக பென் டிரைவ் மூலமே பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச படம் பரப்பப் பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், விரிவான விசாரணைக்கு பிறகே முழுப் பின்னணி தெரிய வரும். அந்த பென் டிரைவில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்னும் வட கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் முடியாத சூழலில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களும், கூட்டணியில் உள்ளவர்களும் ஆபாச வீடியோக்களில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.