Skip to main content

சட்டமன்ற தேர்தல் ! எடப்பாடியை வீழ்த்த நாடார் சமூக அமைப்புகள் திட்டம் !

Published on 16/01/2021 | Edited on 18/01/2021

 

nadar community plan to boycott eps

 

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நாடார் சமூகத்தை வைத்து அரசியல் செய்யத் துவக்கியிருக்கிறார் தொழிலதிபர் வைகுண்டராஜன். ஆனால், என்ன மாதிரி அரசியல் செய்தாலும் எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணிக்கும் திட்டத்தை நாடார்கள் மறந்துவிடவில்லை என்கின்றன நேர்மையான நாடார் சமூக அமைப்புகள் ! இதுகுறித்து நம்மிடம் பேசிய நாடார் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,  ’’தமிழகத்தின் பெரும்பான்மை சமூகங்களில் நாடார் சமூகமும் ஒன்று. ஆனால், நாடார் சமுகத்தைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 5 வருடங்களாக எங்கள் சமூகத்தின் எந்த ஒரு கோரிக்கைகளுக்கும் அவர் செவி சாய்க்கவில்லை. குறிப்பாக, தமிழக அமைச்சரவையில் 3 நாடார்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கொடுக்கவில்லை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான நாடார் பிரதிநிதித்துவத்தை அமைச்சரவையில் தாருங்கள் எனப் பலமுறை கோரிக்கை வைத்தும் அக்கறை காட்டவில்லை.

 

எடப்பாடி பழனிசாமியின் சமூகமான கொங்கு வேளாளர் சமூகத்துக்கு போதிய பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இருந்தது. இந்த சூழலில், அமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ணரெட்டி விலகியபோதும், மணிகண்டன் நீக்கப்பட்ட போதும் காலியான அமைச்சரவை வாய்ப்பினை நாடார் சமூகத்திற்கு கொடுத்திருக்க வேண்டும். அதைப் பரிசீலிக்கக் கூட முன்வரவில்லை முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

மரமேறும் நாடார்களை எம்.பி.சி. பட்டியலில் இணைப்பது, தென்மாவட்ட வளர்ச்சிக்கான ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நாடார் அமைப்புகள் அரசின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறது. ஆனால், எதற்குமே எடப்பாடி பழனிசாமி அசைந்து கொடுக்கவில்லை. இதுதவிர ,  நாடார் சமூகத்தினர்தான் சேர, சோழ, பாண்டியர்களின் வாரிசுகள் என ஜெயலலிதாவும், அவரைத் தொடர்ந்து ஓபிஎஸ்சும் சொன்னார்கள். இதனை வழிமொழிந்து அங்கீகரிக்க எடப்பாடி மறுத்துவிட்டார். இப்படி நாடார்களின் நலன்களுக்காக அவர் எந்த துரும்பையும் அசைக்கவில்லை.

 

அதனால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை எடுக்க நாடார் சமூகம் தீர்மானித்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் நாடார் விரோத அரசியலை எங்கள் சமூகத்தினர் மறந்துவிடவில்லை. எங்களின் கோபம் இந்த தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும். எடப்பாடி பழனிசாமி தொகுதியிலுள்ள நாடார்களே அவரைப் புறக்கணிப்பார்கள்.

 

இதனை உணர்ந்துள்ள வைகுண்டராஜன், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நாடார் சமூகத்தை ஒருங்கிணைக்கிறேன் என ஒரு கூட்டத்தை அண்மையில், சென்னையில் நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில், நாடார் சமூகத்தின் வலிமையான அமைப்புகள் எதுவும் கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பின்னால் நாடார் சமூகமும் இல்லை. தனது குடும்ப பிரச்சனைக்காக நாடார் சமூகத்தை மையப்படுத்தி தனது சுயநல அரசியலைச் செய்திருக்கிறார். செல்வாக்கு இல்லாத தனிநபரை நம்பி எடப்பாடி பழனிசாமி சென்றால், ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கும் நாடார் சமூகத்தின் கோபம் இன்னும் அதிகரிக்கும் ‘’ என்கின்றனர் நம்மிடம்.

 

இந்நிலையில், தமிழகம் முழுவதுமுள்ள நாடார் சமூகத்தின் மனநிலை குறித்து மாவட்ட அமைச்சர்கள் மற்றும் தன்னை சந்திக்கும் நிர்வாகிகள் பலரிடமும் எடப்பாடி பழனிசாமி விவாதித்திருப்பதாக அதிமுக தலைமைக் கழக வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. கூட்டணி; தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கீடு? 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
ADMK Alliance; Allotment of additional seats for DMDk

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது.

அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADMK Alliance; Allotment of additional seats for DMDk

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தேமுதிக சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததால் அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

திடீர் திருப்பம்; கூட்டணிக்கான ரூட்டை மாற்றிய பா.ம.க.?

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
sudden turn pmk has changed the route for the alliance

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளை வழங்க அ.தி.மு.க. மறுத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்ததால் பா.ஜ.க.வுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் கூட்டணி குறித்து முடிவெடுக்க தைலாபுரத்தில் பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் அவசர கூட்டம் கடந்த 15 ஆம் தேதி (15.03.2024) நடைபெற இருந்த நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகக் கூறப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், தென் சென்னை, சிதம்பரம், தர்மபுரி மற்றும் சேலம் என முக்கிய தொகுதிகளுடன் ஏழு பிளஸ் ஒன் (மாநிலங்களவை பதவி) என முடிவாக உள்ளதாகச் சொல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பா.ம.க. விரும்பும் 7 மக்களவைத் தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா பதவியையும் ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் இல்லத்தில் பா.ம.க. எம்.எல்..ஏ அருள் இ.பி.எஸ்சை திடீரென்று நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது எனத் தகவல் வெளியாகி இருந்தது. முன்னதாக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியை பாமக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

sudden turn pmk has changed the route for the alliance

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தின் போது பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ம.க. முக்கிய பங்காற்றும் என்று அன்புமணி பேசியதாகவும் கூறப்படுகிறது.