Skip to main content

'பதற்றத்தில் உள்ளார் மோடி; ஜூன் நான்கோடு முற்றுப்புள்ளி'-திருமாவளவன் பேட்டி

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
nkn

'பிரதமர் மோடி அண்மைக்காலமாக பேசி வருகின்ற கருத்துகள் யாவும் அவர் மிகவும் பதற்றத்தில் இருக்கிறார், தோல்வி பயத்தில் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது'  என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''மதத்தினை வாக்கு வங்கியாக பயன்படுத்தக்கூடிய அரசாக பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பகுஜன் ஒற்றுமை எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் ஆகிய இந்த பகுஜன் சமூகத்தினரின் ஒற்றுமை முக்கியமானது. இட ஒதுக்கீட்டுக்கும் சமூகநீதி கோட்பாட்டுக்கும் எதிரானவர்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும், சமூகநீதி கோட்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதை இந்த மாநாட்டில் வலியுறுத்தி இருக்கிறேன்.

ஓபிசி சமூகத்தினருடைய இட ஒதுக்கீட்டுக்காக, பகுஜன் ஒற்றுமைக்காக பாடுபட்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களையும், கான்சிராம் அவர்களையும், மண்டல் அவர்களையும் நாம் மறந்து விடக்கூடாது. அவர்களுக்கு நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன். இந்த தேர்தலில் மக்கள் சமூகநீதிப் பக்கமே நிற்கிறார்கள். சமூக நீதிக்கு ஆதரவானவர்கள், சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்ற அடிப்படையில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் அமைந்திருப்பதாக கருதுகிறேன். அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவர்கள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவானவர்கள் என்ற அடிப்படையில்தான் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். எனவே அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான பாசிச சக்திகள் வீழ்த்தப்படுவார்கள்.

nn



அரசியலமைப்புச் சட்டத்தை ஆதரிக்கக்கூடிய வகையில் மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து இருக்கிறார்கள். இந்தியா கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு கட்டத் தேர்தலுக்குப் பிறகும் நமது பிரதமர் ஆற்றும் உரை மக்கள் யாருக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. அவர் அண்மைக்காலமாக பேசி வருகின்ற கருத்துகள் யாவும் அவர் மிகவும் பதற்றத்தில் இருக்கிறார், தோல்வி பயத்தில் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக இந்து சமூகத்தினரின் தாலியைப் பறித்து முஸ்லிம்களும் ஒப்படைத்து விடுவார்கள் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தவர்கள் என்று அவர் பேசியதும் சரி, ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னதும் சரி, அடுத்தடுத்து அமித்ஷா போன்றவர்கள் பேசி வருகின்ற கருத்துக்களும் சரி, அவர்கள் ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் பதற்றத்திற்கு உள்ளாகி வருகிறார்கள், மக்கள் பாஜகவுக்கு எதிராகத்தான் வாக்களிக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஆகவே ஜூன் 4-ம் தேதி அன்று வர இருக்கும் தேர்தல் முடிவுகள் பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்''என்றார்

சார்ந்த செய்திகள்