Skip to main content

‘ஐ-பேக் தேவையில்லை அண்ணன் அழகிரி போதும்!’ - விவாதத்தை எழுப்பிய போஸ்டர்கள்! 

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

MK Alagiri's supporters pasted poster


‘ஐ-பேக் தேவையில்லை ஆட்சி அமைக்க கலைஞரின் மூளை உங்கள் அண்ணன் அழகிரி போதும்’ என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் பிறந்த நாளுக்காக அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சித் தலைமைக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் நேரடி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். 


ஆனால் கட்சித் தலைமை, அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில், மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். 

 

இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் குறித்தும், அவர் எப்போதும் முதல்வராக வர முடியாது எனவும், நான் என்ன முடிவெடுத்தாலும் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பேசினார். மேலும், எதையும் சந்திக்கத் தயாராக இருங்கள் எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

MK Alagiri's supporters pasted poster


இந்நிலையில் மு.க.அழகிரியின் பிறந்தநாள் ஜனவரி 30ஆம் தேதி வர உள்ள நிலையில், மதுரையில் அவரது ஆதரவாளர்கள் ‘ஐ-பேக் தேவையில்லை ஆட்சி அமைக்க கலைஞரின் மூளை உங்கள் அண்ணன் அழகிரி போதும்’ என்ற வாசகங்களோடும், ‘சேர்த்தால் உதயம், தவிர்த்தால் அஸ்தமனம்’ என மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்கும் விதமாக போஸ்டர்களை ஒட்டியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

"2014-ல் திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டார். அதன்பிறகு, அவர் வேறு கட்சியிலும் சேரவில்லை தனிக் கட்சியையும் ஆரம்பிக்கவில்லை. தற்போது நடக்கவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அவர் பாஜகவுடன் இணைவார், தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இந்த போஸ்டர் விவகாரத்தால், அவர் தன்னை இன்னும் திமுகவில் நிலைநிறுத்திக்கொள்ள நினைக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. தற்போதுள்ள அரசியல் சூழலில் நமது இலக்கு வெற்றி. அதனால், இவரை திமுகவில் இணைத்துக் கொள்ளலாமே" என மதுரை திமுகவினர் பேசி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்