Skip to main content

“திருமாவளவன் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைக்காகப் போராடுகிறார்” - அமைச்சர் சிவசங்கர்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Minister Sivasankar said that Thirumavalavan is giving voice to social justice

இந்தியா கூட்டணியின் திமுக தலைமையில் சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட  அரியலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் அரியலூரில் திங்கள் கிழமை இரவு நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சிவசங்கர் தலைமை தாங்கி பேசுகையில், ‘நம்மை திசை திருப்ப பல்வேறு பொய்ச்செய்திகள் வரும். நாம் திசை திரும்பாமல் தேர்தல் பணியாற்ற‌ வேண்டும். சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற்றால் அது தமிழ்நாட்டின் வெற்றி. பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை பாஜக பறிக்க முயன்றபோது தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோரின் உரிமைக்காக போராடுகிறார். திருமாவளவன் நாடாளுமன்றத்தில் சமூகநீதியின் குரலாக இருக்கிறார். தனது வாழ்வை சமூகத்திற்கு அர்ப்பணித்தவர். அவரின் உடல்நலத்தை பாதுகாக்கும் அளவிற்காகவாவது ஓய்வு கொடுங்கள். இந்த கூட்டணி ஒருங்கிணைந்த கூட்டணியாக இருக்கவும், தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு துணையாக இருப்பவர் திருமாவளவன்” எனப் பேசினார்.

Minister Sivasankar said that Thirumavalavan is giving voice to social justice

இதனைத் தொடர்ந்து பேசிய சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் திருமாவளவன், “27 ஆம் தேதி நான் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய‌ இருக்கிறேன். குறுகிய கால இடைவெளியில் நாம் சிறப்பாக செயல்பட்டு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். வரும் 22 நாட்கள் திமுக தலைமையில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை நமது கட்சியினர் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடாமல் என்னை பார்க்க கட்சியினர் வந்தால் ஏமாற்றுகின்றனர் என்று பொருள். விசிக கட்சியினர் அனைவரும் வாக்கு சேகரிக்கும் பணியாளர்கள் தான். எனவே தங்களுக்கு கூட்டணி அளிக்கும் பணியை சரியாக செயல்படுத்த வேண்டும்.

எதிர் அணியினர் திட்டமிட்டு நம்மை சீண்டுவார்கள். நாம் இந்த சூதில் இரையாகி விடக்கூடாது. நாம் நேர்மறையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். திமுகவின் சாதனைகளை பரப்பலாம். ஏன் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். என்னை வெற்றி பெற வைக்கிறோமா இல்லையா என்பதல்ல கேள்வி. இந்தியாவை யார் ஆள வேண்டுமென்பதே கேள்வி. தமிழ்நாட்டை போல கேரளா, டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், பீகார் எனப் பல்வேறு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியினர் பணியாற்றி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் அதிமுகவால் ஒன்றும் செய்ய முடியாது என்றால் பாஜகவால் எதுவும் செய்ய முடியாது. இந்தியா கூட்டணியின் கட்சியினர் தங்களின் மாநிலங்களில் வெற்றி பெற்றால் பாஜகவை தூக்கி ஏறிய முடியும். இதை முதலில் கணித்து வியூகத்தை வகுத்தவர் மு.க. ஸ்டாலின். எனவே தான் விசிக தொடர்ந்து திமுகவுடன் பயணிக்கிறது. திமுக கூட்டணியில் தொடர்வதற்கு காரணம், திமுக - விசிக உறவு என்பதை கொள்கை சார்ந்த கூட்டணி என்று கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார். விசிகவிற்கு மட்டும்தான் கலைஞர் இப்படி ஒரு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த கூட்டணி 2018 காவிரி போராட்டத்தில் உருவானது. அன்றிலிருந்து இன்று வரை இந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது.

2009ம் ஆண்டு என்னை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற பல மணி நேரம் பேசினார்கள். நான் அப்போது தனி ஒருவனாக சிக்கினேன். ஆனால் கலைஞரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தேன். எவ்வளவு எதிர்ப்பு இருந்தபோதும் இந்த கூட்டணி 28 தொகுதிகளை வென்றது. திமுக தோல்விக்கு காரணம் திருமாவளவன் - கிருஷ்ணசாமி என்று பத்திரிகைகள் எழுதின. ஆனால் கலைஞர் அதற்கு பதிலளித்து பேசுகையில் விசிக வாக்குகளால் தான் கடலூரில் 5/9 தொகுதிகளை வென்றோம் என்று தெரிவித்தார். இதனை திமுக தலைவர் உள்ளிட்ட அனைவரும் நன்கு அறிவர்.

நானும் மு.க. ஸ்டாலினும் சமூகநீதிக்காக கை கோர்த்து இருக்கிறோம். பாஜகவிற்கு எதிரான ஒரு அணியை கட்டமைத்ததில் விசிகவின் பங்கு கணிசமானது. இந்த நாட்டை காப்பாற்ற நாம் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சியினர் மற்றும் திமுகவினர் பேசினர். கூட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

சார்ந்த செய்திகள்