நாடு முழுவதும் பாஜகவினரால் நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தில், பாஜக எம்.எல்.ஏ.க்கள் உணவு உண்ணும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டுக்கான இரண்டாவது கூட்டத்தொடரை பல்வேறு காரணங்களைச் சொல்லி எதிர்க்கட்சிகள் முடக்கின. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்த முடியாமலே போனது. இதனைக் கண்டித்து நேற்று நாடு முழுவதும் உள்ள பாஜக உறுப்பினர்கள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரதத்தில் நேற்று சென்னை வந்திருந்த பிரதமர் மோடியும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மகாராஷ்டிரா மாநில பாஜகவைச் சேர்ந்த சஞ்சய் பிகாடே மற்றும் பீம்ராவ் தப்கீர் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதத்திற்காக அனைவரும் கூடியிருக்கும் இடத்தில் வைத்தே உணவருந்தியுள்ளனர். இந்தக் காட்சிகள் வீடியோவாக படமாக்கப்பட்டு, வைரலாகியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இதை விவாதமாக கையிலெடுத்துள்ளன.
முன்னதாக, நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிரான மத்திய அரசின் அடாவடிகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அதற்கு முன்பாக டெல்லியில் உள்ள உணவகத்தில் காங்கிரஸ் மூத்ததலைவர் அர்விந்தர் சிங் லவ்லி உணவருந்தும் காட்சிகளை பாஜகவினர் வைரலாக்கினர். பின்னர் லவ்லி அதற்கு விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.