மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவிற்கும் திமுக எம்.பிக்களுக்கும் இடையே மக்களவையில் கடுமையான வாதங்கள் நடந்தது.
மக்களவையில் கேள்வி நேரத்தில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு, நாட்டில் எத்தனை மருத்துவமனைகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் துவங்கப்படாத மருத்துவக் கல்லூரிகள் எத்தனை என கேள்விகள் எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, “மதுரை எய்ம்ஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்குகின்றன. மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மருத்துவமனை தொடங்கப்பட்டு விட்டது. மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டும் மேம்படுத்தப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இதை அரசியல் ஆக்குகின்றன. மதுரையில் கல்லூரி கட்ட உரிய நேரத்தில் மாநில அரசு நிதி ஒதுக்காததும், நிதியுதவி அளிப்பதாக சொன்ன ஜப்பான் பன்னாட்டு நிதியுதவி நிறுவன பிரதிநிதிகள் கடந்த 2 ஆண்டுகளாக மதுரைக்கு வர முடியவில்லை. இதனால் திட்ட செலவு அதிகரித்துள்ளது. இம்மாதிரியான அனைத்து தகவல்களையும் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு அளித்துள்ளோம். ஆனால் அதையும் மீறி எதிர்க்கட்சிகள் இதை அரசியல் ஆக்குகின்றனர்.
உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், குறைந்த நோயாளிகள் மற்றும் குறைந்த பேராசிரியர்கள் ஆகியோரைக் கொண்டு இயங்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறேன். இதனால்தான் என் மீது கோபப்படுகின்றனர் பரவாயில்லை. இதனால் பின்வாங்கி விட மாட்டேன்” எனக் கூறினார்.
ஆனாலும் அமைச்சர் பேசத் தொடங்கியதில் இருந்து திமுக எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்புக் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் கோபமடைந்த அமைச்சர், “விடமாட்டேன். யாருக்கு என்ன கடிவாளம் போட முடியுமோ அது போடப்படும்” எனக் கூறினார். இதனைக் கேட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் எங்களை மிரட்டுகின்றார் மன்னிப்பு கேட்க வேண்டுமென சபாநாயகரிடம் வாதிட்டனர். தொடர்ந்து அவையில் இருந்து வெளியேறினர்.