Skip to main content

“கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம்” - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
 Indian Communist speech We have asked for additional blocks

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று (03.02.2024) பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 விருப்ப தொகுதியில் இருந்து 2 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களையும் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பங்கீட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி. சுப்பராயன், துணைப் பொதுச் செயலாளர் வீரபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள், “திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கடந்த முறையை விட கூடுதலாக தொகுதிகளை கேட்டுள்ளோம். முதல்வர் தமிழ்நாடு திரும்பியதும் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்