Skip to main content

“பா.ஜ.க.வுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது” - மோடிக்கு டி.ஆர். பாலு பதிலடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

பிரதமர் மோடி சேலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சேலத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாரம் தோறும் தமிழ்நாட்டுக்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பிரதமர் மோடி. இந்த வாரம் சேலத்தில் முழங்கிவிட்டுப் போயிருக்கிறார். பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர், தனது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டிருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாததால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி இருக்கிறார். ‘தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது’ எனப் பேசியிருக்கிறார். மோடி அவர்களே! உங்களுக்குத்தான் தூக்கம் தொலைந்துவிட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டுப் போகிறீர்கள்.

கடந்த தேர்தல் காலங்களில் இந்திய பிரதமர்கள் ஓரிரு முறைதான் தமிழ்நாட்டு வந்து பிரச்சாரம் செய்துவிட்டு போனார்கள். ஆனால், உங்களுக்குத் தூக்கம் வராததால் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் என அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் செய்கிறீர்கள். உங்கள் பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள். சேலம் ஆடிட்டர் ரமேஷ் குறித்து பேசி கண்ணீர் விட்டிருக்கிறார் மோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது தான் சேலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து இப்போது நினைவுகூறுவது ஏன்? கோவையில் ரோட் ஷோ நடத்திய போது, 1998இல் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியான நாடகத்தை தேர்தலுக்காக பா.ஜ.க. நடத்த ஆரம்பித்திருக்கிறது. ரோட்டில் ஷோ காட்டினாரே தவிர அதைப் பார்க்கத்தான் ஆள் இல்லை.

Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை சுரேஷ், வேலூர் அரவிந்தன், வெள்ளையப்பன், சென்னை சுரேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். இதை எல்லாம் பழைய பாஜகவினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். அந்த ஜெயலலிதாவை தான் சேலம் கூட்டத்தில் புகழ்ந்து பேசி இருக்கிறார் பிரதமர். ‘ஜெயலலிதாவை திமுகவினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப் பாருங்கள்’ எனப் பேசியிருக்கிறார் மோடி. அந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பதை மோடி அவர்களே நினைத்துப் பாருங்கள். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மோடி புகழ்வதைப் பார்த்து அ.தி.மு.க.வினர் மிக ஏளனமாக பேட்டி அளித்தார்கள். எதற்காக இவர்கள் பேரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று கூட வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். ஆனாலும் ஜெயலலிதாவை மறக்கவில்லை மோடி.

‘குஜராத் மோடியா? தமிழ்நாட்டு லேடியா?’ என்று ஜெயலலிதா கேட்டதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை. மோடி வேண்டுமானால் மறந்திருக்கலாம். பதவி ஆசை அவரை பாடாகப் படுத்துகிறது. போகிற போக்கைப் பார்த்தால் ஜெயலலிதாவின் சமாதிக்கே சென்று கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து விடுவார் போல!. ‘திமுக, காங்கிரசின் ஊழலைப் பற்றி பேச ஒருநாள் போதாது’ எனச் சொல்லியிருக்கிறார் மோடி. ஊழலைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இருக்கிறதா? தேர்தல் பத்திரம் திட்டத்தில் பா.ஜ.க. நடத்திய தில்லுமுல்லு நாடு முழுவதும் நாறிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதியில் 50 சதவிகிதத்திற்கு மேல் பாஜகதான் வாங்கியது. சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற அதிகார அமைப்புகளை ஏவி, அதன் மூலம் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை மிரட்டிப் பறித்த பா.ஜ.க. உத்தமர் வேஷம் போடுகிறது. கொள்ளையை சட்டப்பூர்வமாக ஆக்கிய கட்சி பா.ஜ.க.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2 ஜி அலைக்கற்றை பற்றிப் பேசியிருக்கிறார் மோடி. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் 2017இல் விடுதலை செய்துவிட்டது. அதன் பிறகும் தி.மு.க.வின் பங்கு பற்றி மோடி வலிந்து பேசிக்கொண்டிருக்கிறார். 2022 ஆகஸ்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போக வேண்டிய 5ஜி அலைக்கற்றை 1 ½ லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. மீதி பணம் யார் பாக்கெட்டிற்கு போனது? என மோடி பதில் சொல்வாரா?. பெண் சக்தி பற்றியெல்லாம் பெருமை பொங்கப் பேசியிருக்கிறார் மோடி. ‘பெண்களுக்குச் சேவை செய்ய உறுதி ஏற்று இருக்கிறோம். பெண்கள்தான் பாஜகவின் கவசமாக உள்ளது’ என்றெல்லாம் பொய்களைக் கொட்டியிருக்கிறார் மோடி. மணிப்பூரில் நின்று மோடியால் இப்படிப் பேச முடியுமா?. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சிகள் சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது. அந்த மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொன்னாரா? அந்த பாவம் எல்லாம் எந்த கங்கையில் குளித்தாலும் போகாது.

‘தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்றுவோம்’ என்கிறார் மோடி. திருநெல்வேலியும் தூத்துக்குடியும் சென்னையும் பெரு வெள்ளத்தில் சிக்கி பேரிடர் நிவாரணம் கேட்டு தமிழ்நாடு கையேந்தியபோது ஒரு பைசாவும் தராத மோடிதான், தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்ற போகிறாராம். ‘ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்திலிருந்துதான் எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கப் போகிறது’ என சொல்லியிருக்கிறார் மோடி. பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து மக்கள் விடுதலை பெற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். ஏப்ரல் 19 ஆம் தேதிதான் பாஜகவுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது. ஒரு பிரதமர், அவர் தனது தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும். பா.ஜ.க.வின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பேசக்கூடாது. மீறி மோடி அப்படி பேசுகிறார் என்றால் தோற்கப் போகிறோம் என்பதை அவரே உணர்ந்து விட்டார் என்பது தெரிகிறது. 400 தொகுதிகள் வெற்றி பெறப் போவதாக அவர் சொல்லிக் கொள்கிறார். உண்மையில் 400 தொகுதிகள் வெற்றி பெறப் போகிறவர் இப்படி தரந்தாழ்ந்து பேசமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.