Skip to main content

‘இந்தியா’ கூட்டணி: இன்று முக்கிய ஆலோசனை!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Important advice in the 'India' alliance

இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.

அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, பரப்புரையைத் தொடங்குவது குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காணொளி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.