Skip to main content

“நானும் டெல்டாகாரன் தான்; உறுதியாக நிற்பேன்” - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

''I'm a Delta guy too; I will stand firmly''- Chief Minister's speech in the assembly

 

தமிழகத்தில் 66 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பாணைக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

 

தமிழக அரசு சார்பில் நேற்று, 'நிலக்கரி சுரங்கம் அமைக்கும் நிலத்தை லீசுக்கு எடுப்பதற்கான அனுமதியை மாநில அரசு கொடுத்தால் மட்டுமே உள்ளே சென்று சுரங்கம் தோண்டும் பணிகளைச் செய்ய முடியும் எனவே விவசாயிகள் யாரும் கவலை அடைய வேண்டாம்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களைச் சந்தித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை நிகழ்ந்து வரும் நிலையில் பேரவையிலும் இது குறித்து விவாதம் நடத்த திமுக எம்.எல்.ஏ  டி.ஆர்.பி.ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

 

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் பேரவையில் நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ், அதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த வேல்முருகன், காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜவாஹிருல்லா, கொங்குநாடு தேசிய கட்சி ஈஸ்வரன் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

 

''I'm a Delta guy too; I will stand firmly''- Chief Minister's speech in the assembly

 

கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய தமிழக முதல்வர், ''நீங்கள் எல்லோரும் எப்படி அதிர்ச்சிக்கு ஆளானீர்களோ அதுபோல் நானும்தான் அதிர்ச்சிக்கு ஆளானேன். செய்தியைப் பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசி, அதற்கு பிறகு பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தின் நகலை நாடாளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கக் கூடிய காரணத்தால் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு ஒரு பிரதி அனுப்பி உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து நம்முடைய எதிர்ப்பையும், நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் தர வேண்டும் என உத்தரவிட்டேன்.

 

அவரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். தொழில்துறை அமைச்சர் சொன்னதுபோல் சம்பந்தப்பட்ட அமைச்சர் வெளியூரில் இருக்கின்ற காரணத்தால் நேரடியாகச் சந்திக்க முடிவில்லை. இதனால் டி.ஆர்.பாலு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். பேசிய பொழுது தமிழக முதல்வர் அனுப்பி இருக்கும் கடிதத்திற்கு நிச்சயமாக நாங்கள் மதிப்பு கொடுப்போம் கவலைப்பட வேண்டாம் என்று உத்தரவாதத்தை ஒன்றிய அமைச்சர் சொன்னதாக டி.ஆர்.பாலு சொல்லியிருக்கிறார். ஆகவே நிச்சயமாக சொல்கிறேன் முதலமைச்சராக மட்டுமல்ல நானும் டெல்டாகாரன் தான். எனவே இதில் நான் உறுதியாக இருப்பேன். நீங்கள் எல்லோரும் எப்படி உறுதியாக இருக்கிறீர்களோ அதைவிட அதிகமாக உறுதியாக இருப்பேன்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.