சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கடந்த 23ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசுகையில், “நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947 இல் நாடு இரண்டாகப் பிரிந்தது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்” எனப் பேசியிருந்தார். ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக ஆளுநரின் கருத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், 'காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என ஆளுநர் ரவி கூறியது வன்மம் கலந்த நோக்கம் கொண்டது. தேசத் தந்தை எனப் போற்றப்படும் காந்தியை பொய்கள், அவதூறுகளால் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டுள்ளனர். காந்தியின் கொள்கைகள் மட்டுமல்ல, அவரே இழிவுபடுத்தப்படுகிறார். நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாத சகதியில் சிக்கியுள்ளது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு .இதை உடனே தடுக்க வேண்டும். காந்தி கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதி நாடு முழுவதும் மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
ஜனவரி 30 ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். உறுதிமொழி ஏற்பில் அனைத்து மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தமிழ்நாட்டின் மாண்பை இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்துவோம். இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கவனம் செலுத்தும் அதே வேளையில் தமிழ்நாட்டுக்கு இந்த கடமை அதிகம் இருக்கிறது. ஒற்றுமையின் அடையாளமாக உள்ள காந்தியின் புகழை சிதைப்பதன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க முயற்சி செய்கிறார்கள். காந்தி பிறந்தநாளை 'ஸ்வச் பாரத் அபியான்' என மாற்றியதில் இருக்கிறது இவர்களின் அழித்தல் வேலைகள். 'ஸ்வச் பாரத்' என மாற்றியது காந்தியின் அனைத்து அடையாளங்களையும் அழித்தல் ஆகும். அதேபோன்ற காரியத்தை அக்டோபர் இரண்டில் பேரணி நடத்துவதன் மூலம் ஆர்எஸ்எஸ் திசை திருப்ப பார்த்தது. அதை அரசு அனுமதிக்கவில்லை. எத்தகைய திரைமறைவு வேலைகள் பார்த்தாலும் மக்களின் மனதில் குடியிருக்கிறார் காந்தியடிகள். மதவெறியை மாய்ப்போம்; மனிதநேயம் காப்போம்; வாழ்க காந்தியின் புகழ்' என தெரிவித்துள்ளார்.