Skip to main content

தமிழகத்தின் கஜானா காலி... முதலமைச்சரும் - துணை முதலமைச்சரும்... மு.க.ஸ்டாலின்

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

 

தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில், கஜானாவைக் காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், முதலமைச்சரும் - துணை முதலமைச்சரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

“சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தைச் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை போதிய ஜி.எஸ்.டி. வருவாய் இல்லாததால் வழங்க முடியாது” என்று மத்திய பா.ஜ.க. அரசு கைவிரித்துள்ளதை, அ.தி.மு.க. அரசும், முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியும், நிதியமைச்சராகவும் - துணை முதலமைச்சராகவும் இருக்கும் திரு. ஓ. பன்னீர்செல்வமும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

mk stalin



ஜி.எஸ்.டி சட்டத்தை செயல்படுத்துவதால், உற்பத்தி செய்யும் மாநிலங்களின் வருவாய் பாதிக்கப்படும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மாநில அரசுகள் முன் வைத்தன. திராவிட முன்னேற்றக் கழகமும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியது. அப்போது, “ஜி.எஸ்.டி சட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் இழப்பீடு ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுகட்டப்படும். குறிப்பாக இரு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்” என்று மத்திய பா.ஜ.க. அரசு பொது வெளியிலும், சட்டரீதியாக நாடாளுமன்றத்திலும் உறுதியளித்தது. அந்த வாக்குறுதியை நம்பித்தான் பல்வேறு மாநிலங்களும் தங்கள் சட்டமன்றத்தில் ஜி.எஸ்.டி. அரசியல் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தன.
 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் உயிருடன் இருந்தவரை எதிர்த்த இந்த ஜி.எஸ்.டி சட்டத்தை, பின்னர் ஆதரித்த முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 30.6.2017 நள்ளிரவில் நடைபெற்ற “ஜி.எஸ்.டி சட்ட துவக்க விழா”விற்கு அன்றைய  நிதியமைச்சர் திரு. ஜெயக்குமாரை அனுப்பி வைத்தார். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த மறுநாள், “இது வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய வரி விதிப்பு முறை” என்று அ.தி.மு.க. அரசு செய்திக் குறிப்பே வெளியிட்டு மகிழ்ச்சியடைந்தது.
 

“மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்ட வலுவுள்ள நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது” என்று சட்டப் பேரவையில், எடப்பாடி திரு. பழனிசாமி அரசின் 8.1.2018 அன்றைய ஆளுநர் உரையில், மத்திய பா.ஜ.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதே உரையில், “இந்தச் சட்டம் மாநிலத்தின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்” என்றும் புகழாரம் சூட்டப்பட்டது.


 

ஜி.எஸ்.டி சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்பு வைத்து நிறைவேற்ற முனையும் போது - அ.தி.மு.க. எப்படி இந்த மசோதாவை முதலில் எதிர்த்தது என்ற விவரங்களை எல்லாம் எதிர்க்கட்சித்  தலைவர் என்ற முறையில் விளக்கிக் கூறி - “வணிகர்களை, மாநில நிதி உரிமையைப் பாதிக்கும் இந்த சட்டத்தை அவசரகோலத்தில் நிறைவேற்ற வேண்டாம். தேர்வுக் கமிட்டிக்கு அனுப்புங்கள்” என்று எவ்வளவோ வலியுறுத்திக் கேட்டேன். எனது கோரிக்கையை நிராகரித்து விட்டு, அன்றைக்கு ஜி.எஸ்.டி. சட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்தது.
 

ஆனால் ஜி.எஸ்.டி. சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் 9,270 கோடி ரூபாய் இழப்பீடு பற்றி அ.தி.மு.க. அரசு சிறிதும் அக்கறை காட்டவில்லை. பிறகு, 2019-20-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் “ஜி.எஸ்.டி மற்றும் இழப்பீடு வகையில் சுமார் 5,909 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ளது” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

அந்தத் தொகை பெறப்பட்டதா?

ஜி.எஸ்.டி சட்டத்தால் மாநிலத்திற்கு இதுவரை ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு?

அதில் இதுவரை மத்திய அரசிடமிருந்து பெற்றது எவ்வளவு?

நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு?

- எது பற்றியும் அ.தி.மு.க. அரசு வெளிப்படையாகப் பேச மறுக்கிறது!
 

தற்போது, டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சார்ந்த நிதியமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள், “ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வரையிலான இழப்பீட்டுத் தொகையை விடுவிக்கக் கோரியும்” மத்திய நிதியமைச்சரைச் சந்தித்து முறையிட்டுள்ளார்கள். அவர்களுடனும் தமிழக அரசின் நிதியமைச்சர் செல்லவில்லை. ஒருவேளை மத்திய பா.ஜ.க. அரசு தங்கள் மீது கோபம் கொண்டால் என்ன செய்வது என்ற பயமோ என்னவோ!
 

எதற்கெடுத்தாலும் வழக்கமாக கடிதம் மட்டும் எழுதும் முதலமைச்சர் திரு. பழனிசாமியும் இது குறித்து மவுனமாகவே இருக்கிறார்.


 

“ஆட்சியில் இருக்கப் போவது இதுவே கடைசிமுறை. ஆகவே நாம் எதற்காக மாநில அரசின் நிதி உரிமைக்காக மத்திய அரசுடன் மோதி, கடனாகப் பெற்ற பதவிக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்” என்ற அச்சத்தில், மாநில நிதி தன்னாட்சி உரிமையை ஒட்டுமொத்தமாக சரணாகதி செய்து விட்டு அமர்ந்திருக்கிறார் எடப்பாடி திரு. பழனிசாமி.
 

ஆகவே, ஜி.எஸ்.டி. சட்டத்தால் இதுவரை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு? வராமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், முதலமைச்சரும், நிதியமைச்சரும் ஒளிவு மறைவின்றி உடனடியாக வெளியிட வேண்டும். ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியின் மோசமான நிதி மேலாண்மையால், 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடி ரூபாய் கடன் வலையில் சிக்கி, மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் நிதி நிலைமையில், “ஜி.எஸ்.டி இழப்பீட்டையும்” சுமையாக ஏற்றி வைத்து - கஜானாவை காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், முதலமைச்சரும் - துணை முதலமைச்சரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது. ஆகவே, மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையைப் பெறுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். “மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும்” என்ற வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய பா.ஜ.க. அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்டிடவும் - ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிடவும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதில் தொடர்ந்து எவ்வித நடவடிக்கையுமின்றி அமைதி காப்பது, மாநிலத்திற்கு மேலும் சில பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.