நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில், பிரபல குத்துச்சண்டை வீரரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜேந்தர் சிங் இன்று (03.04.2024) தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். கடந்த 2008 ஆன் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் ஆவார். கடந்த 2019 ஆம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் டெல்லி தெற்கு தொகுதியில் போட்டியிட்டு விஜயேந்தர் சிங் தோல்வி அடைந்தார். மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க.வில் இணைந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பா.ஜ.க.வில் இணைந்து குறித்து பேசுகையில், “நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவும் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். விஜேந்தர் சிங் நேற்று வரை தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் காங்கிரஸ் க்ட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பதிவுகளை பகிர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது