Skip to main content

கோடநாடு வழக்கு; தி.மு.க.வினருக்கும் குற்றவாளிகளுக்கும் சம்பந்தம்? - சந்தேகிக்கும் இ.பி.எஸ்.

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

EPS doubtful DMK's connection with criminals with Kodanadu case

 

மதுரை மீனாட்சி அம்மன் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு நேற்று வந்தார். சாமி தரிசனம் செய்ய வந்த அவரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் வரவேற்றனர். இதனையடுத்து, மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் அ.தி.மு.க மாநாடு வெற்றி பெற்றதற்கு சிறப்பு பூஜைகள் செய்து விசேஷ வழிபாடுகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர், மூலவர், சுந்தரேஸ்வரர், முக்குருணி விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கியும், மலர் மாலை அணிவித்தும் மரியாதை செய்தனர்.

 

அதன் பின்னர், சென்னை வருவதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மதுரையில் நடந்த அ.தி.மு.க எழுச்சி மாநாட்டில் மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்த அத்தனை அதிமுக தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார். 

 

அப்போது அவரிடம்,  கோடநாடு கொலை வழக்கு குறித்து செய்தியாளர்கள் தரப்பிலிருந்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “கோடநாடு கொலை வழக்கு குறித்து நான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைதியாக இருந்தார். அ.தி.மு.க ஆட்சியில் நடந்ததை மட்டும் குறிப்பிட்டு பேசி வேண்டுமென்றே அவதூறுகளை பரப்பி வருகின்றனர். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு குறித்து சட்டமன்றத்தில் நான் பலமுறை பேசியுள்ளேன். மேலும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அ.தி.மு.க ஆட்சியில் தான் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், அந்த குற்றவாளிகளை காப்பாற்ற திமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாட தயாராக இருந்தார்கள். 

 

குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்ததும் தி.மு.க.வினர் தான். அதனால் தான் தி.மு.க மீது எனக்கு அதிக சந்தேகம் எழுகிறது. கோடநாடு கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய ஜாமீன்தாரர்களான தி.மு.க.வினருக்கும் என்ன சம்மந்தம்? இந்த குற்றவாளிகள் ஏற்கனவே கேரளாவில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற கொடும் குற்றங்களை செய்தவர்கள். அவர்கள் சம்மந்தப்பட்ட வழக்குகள் இன்னமும் கேரளா நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அவர்களுக்கு ஏன் ஜாமீன் வழங்க திமுக தயாராக இருந்தது.

 

கொரானா பெருந்தொற்று காலகட்டத்தில் இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்ததால் சிறிய காலதாமதம் ஆனது. ஆனால், அப்போது இந்த வழக்கு 90 சதவீதம் முடிவடைந்தது. அதற்கு பின் வந்த தி.மு.க. ஆட்சிக்கு பிறகு, இந்த வழக்கை ஐ.ஜி தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சம்மந்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தனர். வெறும் 10 சதவீதம் மீதம் உள்ள இந்த வழக்கை முடிப்பதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் ஆனது. எங்கள் மீது எந்த குற்றமும் சுமத்த முடியாத காரணத்தினால் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அடிக்கடி வெளியிடும் குற்றச்சாட்டுகளை கண்டும் நாங்கள் எப்போதும் பதறவில்லை.  குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்களை விசாரித்தால் தான் உண்மை என்னவென்று வெளிவரும். அதனால், கோடநாடு வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.