தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். தனித்திருப்போம் விழித்திருப்போம்! கொரோனாவைத் தடுத்திடுவோம் எனக் கூறியுள்ளார் திருவாடானை தொகுதி எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கல்விக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்துமே மூடப்பட்டுள்ளன. மக்களுக்காகத் தங்களைத் தாங்களே முடக்கிக் கொண்டு நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தில் பாதிப்புகள் அதிகம்தான்! இதைத் தமிழக அரசு உணர்ந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 1000/- நிதி உதவி வழங்கியுள்ளது வரவேற்க தக்கது.
திரைப்படத்துறை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதால் அதில் பணிபுரியும் அன்றாட தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவதை உணர்ந்து, திரைத்துறை சார்ந்தோரே நிதி உதவிகளைச் செய்கின்றனர் அதுவும் வரவேற்கத்தது.
அதேபோல், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஆயிரக்கணக்கான நாடக நடிகர்கள், எந்தத் தொழில் நிலை இன்றி அன்றாட சோற்றுக்கே வழியின்றி உள்ளனர். இதைத் திரைத்துறை சார்ந்தோரும் உணரவேண்டும். நாடகக் கலைஞர்களுக்கு உதவு முன் வரவேண்டும்.
அதே போல் தமிழக அரசு அவர்களுக்குப் போதிய நிதி உதவி வழங்க வேண்டும். ஓர் இக்கட்டாண நிலையில் தவிக்கும் நமது மக்களைக் காப்பதைப் போல், நமது நாடக கலைஞர்களையும் காப்பாற்ற தமிழக அரசு முன் வரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.