Skip to main content

ஏழு தமிழர் விடுதலைக்கு ஆளுனர் ஒப்புதல் அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்! ராமதாஸ்

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

ramadoss

 

ஏழு தமிழர் விடுதலை பற்றி ஆளுனர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். பேரறிவாளனின் விடுதலை குறித்த வழக்கு இம்மாதம் 23-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதுவரை காத்திருக்காமல், அதற்கு முன்பாகவே 7 தமிழர் விடுதலைக்கு ஆளுனர் ஒப்புதல் அளிப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுனர் தேவையற்ற காலதாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது; ஆளுனரிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தகக் கண்டிப்பு நிறைந்த வார்த்தைகள்  7 தமிழர்கள் விடுதலை தொடர்பான விவகாரத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியிருக்கின்றன.

 

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  தண்டனைக் காலத்தை விட அதிகமாக 30 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரை தீர்மானத்தை அதே ஆண்டின் செப்டம்பர் 9-ஆம் தேதி நிறைவேற்றிய தமிழக அமைச்சரவை அன்றே ஆளுனருக்கும் அனுப்பி வைத்தது.

 

ஆனால், அதன்பின் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் மீது ஆளுனர் முடிவெடுக்காமல் தாமதித்து வருகிறார். இத்தகைய நிலையில், ஆளுனர் முடிவெடுக்கும் வரை தம்மை விடுதலை செய்ய ஆணையிட வேண்டும் என்று கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

 

உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கை இன்று விசாரித்த நீதியரசர் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, 7 தமிழர்களின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவெடுப்பதில் ஆளுனர் தேவையின்றி தாமதம் செய்து வருவதைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. ‘‘இராஜிவ்காந்தி படுகொலை தொடர்பான எம்.டி.எம்.ஏ எனப்படும் பல்முனை கண்காணிப்பு முகமையின் விசாரணை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும், அதன்பிறகு தான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியும் என்றும் ஆளுனர் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது.

 

இந்த வழக்கிற்கும் எம்.டி.எம்.ஏ விசாரணைக்கு எந்தத் தொடர்பும் இல்லை. 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் எழுவருடன் சம்பந்தமில்லாத மனிதர்களைப் பற்றித் தான் எம்.டி.எம்.ஏ விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்தப்பட்டு வரும் அந்த அமைப்பின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவை குறித்த ஆவணங்களையெல்லாம் ஆளுனரிடம் அளித்து தெளிவுபடுத்தினீர்களா?’’ எனத் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வினா எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

7 தமிழர் விடுதலை பற்றி  2 வாரங்களில் ஆளுனர் முடிவெடுக்க முடியும் என்ற நிலையில், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த முடிவும் எடுக்காமல் ஆளுனர் தாமதப்படுத்துவது நியாயமல்ல; அதை ஏற்க முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விஷயத்தில் பா.ம.க என்னென்ன வாதங்களை பொதுவெளியில் முன்வைத்து வந்ததோ, அதையேதான் உச்சநீதிமன்றமும் இப்போது கூறியிருக்கிறது. இந்த விஷயத்தில் ஆளுனர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது மிகப்பெரிய முன்னேற்றமாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி 7 தமிழர் விடுதலையை தமிழக அரசு விரைந்து உறுதி செய்ய வேண்டும்.

 

cnc

 

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.50% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழக ஆளுனர் தேவையின்றி காலதாமதம் செய்து வந்தார். ஆளுனருக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக ஒப்புதல் பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தான் முதலில் வலியுறுத்தியது. உடனடியாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆளுனரை சந்தித்து வலியுறுத்தினார்; அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் குழுவை அனுப்பி அழுத்தம் கொடுத்தார்; நிறைவாக இடைக்கால ஏற்பாடாக அரசாணை பிறப்பித்தார். அதன் பயனாகவே 7.50% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்தார். இப்போது உச்சநீதிமன்றமே கூறி விட்ட நிலையில், 7 தமிழர் விடுதலை தொடர்பான விஷயத்தில் ஆளுனருக்கு அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் அரசுக்கு வெற்றி கிடைக்கும் என்பது உறுதி.

 

எனவே, உச்சநீதிமன்றம் கூறியவாறு ஆளுனர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் எம்.டி.எம்.ஏ எனப்படும் பல்முனை கண்காணிப்பு முகமையின் விசாரணை அறிக்கைக்கும் 7 தமிழர்களின் விடுதலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவருக்கு தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். பேரறிவாளனின் விடுதலை குறித்த வழக்கு, இம்மாதம் 23-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதுவரை காத்திருக்காமல், அதற்கு முன்பாகவே 7 தமிழர் விடுதலைக்கு ஆளுனர் ஒப்புதல் அளிப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.