Skip to main content

“மதுவிலக்கு, மதுக்கடைகள் குறைப்பு குறித்து திமுக வாக்குறுதி கொடுக்கவில்லை” - அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

nn

 

மதுவிலக்கை கொண்டு வருவதாகவோ மதுக்கடைகளை குறைப்பதாகவோ திமுக வாக்குறுதி கொடுக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

இடைத்தேர்தல் பிரச்சாரப் பணியிலிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி 15 ஆம் தேதி வாக்காளர்களிடம் வாக்கு கேட்டு ஈரோடு வஊசி பூங்கா பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஏதோ திமுக ஆட்சியில் தான் மதுக்கடைகள் கொண்டுவரப்பட்டதாக சிலர் சித்தரிக்கின்றனர். அது முற்றிலும் தவறு. எங்களது ஆட்சி வந்த பிறகு பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த ஏராளமான மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுக்கடை செயல்படும் நேரத்தை குறைக்க முடியுமா என்று உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. அருகில் உள்ள பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நேரத்தை குறைக்கவில்லை. கொரோனா காலத்தில் கூட பாண்டிச்சேரியில் மதுக்கடைகள் வழக்கம்போல செயல்பட்டன. டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு பாட்டிலுக்கு ரூபாய் 10, 20 என அதிக விலை வைத்து விற்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்கள் அரசுக்கு எதிராக தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

nn

 

மூன்று மாதங்களுக்கு முன்பே விசைத்தறியாளர்களுக்கு யூனிட் 750 இலிருந்து 1000 யூனிட், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 இலிருந்து 300 யூனிட் இலவச மின்சாரம் உயர்த்தி வழங்க தீர்மானிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்திலும் இதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி அச்சலுகையை வழங்க தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் வலியுறுத்தி உள்ளோம். இந்த இடைத்தேர்தலுக்கு பிறகு வாக்குறுதி நிறைவேற்றப்படும். சுமார் 30 சதவீதத்திற்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கோடி பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது, மின்வாரியத்துக்கு வழங்கும் மானியத்தை முதல்வர் ரூபாய் 9000 கோடியில் இருந்து 13000 கோடியாக உயர்த்தியுள்ளார்.

 

2.67 கோடி மின் நுகர்வோரில் 2.60 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28 கடைசி நாளாகும். அதற்குப் பிறகு நீட்டிக்கப்படாது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் 110 இடங்களில் திமுக தேர்தல் பணிமனைகளை அமைத்துள்ளோம். மக்கள் தாங்களாகவே பணிமனைகளுக்கு வருகின்றனர். இதில் எந்த விதிமீறலும் இல்லை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்