தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்தப்பணிகளை செய்துவருகின்றனர்.
கடந்த பல தேர்தல்களாகவே திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார், போளுர், கலசப்பாக்கம், செங்கம் தொகுதிகளைத் தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஒதுக்கிவந்தது திமுக. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது கலசப்பாக்கம், செய்யார் தொகுதிகள் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இதனால் அக்கட்சியினரிடையே கடுமையான அதிருப்தி நிலவிவந்தது. கடந்த 20 ஆண்டுகளாக திமுகவின் சின்னமான உதயசூரியனை இந்த தொகுதிகள் பார்க்கவில்லை என குறைப்பட்டுக்கொண்டனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே 2021 சட்டமன்றத் தேர்தலின்போது மாவட்டத்தில் உள்ள 8 தொகுதி முழுவதிலும் திமுகவினரே நிற்க, உதயசூரியன் உதிக்க தலைமையிடம் பேசுகிறேன் என உறுதியளித்து வந்தார் திருவண்ணாமலை தெற்கு மா.செவான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.
இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ., வி.சி.க., உட்பட கூட்டணிக் கட்சிகளுடனான கூட்டணி பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு போன்றவை முடிவுக்கு வந்துள்ளன. இதனைப் பார்த்து திருவண்ணாமலை மாவட்ட திமுக தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் திமுகவே போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. நீண்ட வருடமாக உதயசூரியன் சின்னத்தைக் காணாத செய்யார், கலசப்பாக்கம் தொகுதி திமுகவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தத் தொகுதிகளில் திமுகவினர் பலரும் சீட் பெற விரும்பி மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அக்கட்சி நிர்வாகிகள், ‘யார் வேட்பாளர் என்றாலும் இந்த தொகுதிகளில் உடன்பிறப்புகள் தீவிரமாக உழைப்பார்கள்’ என்கிறார்கள்.