எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அ.தி.மு.க.வில் ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இன்று எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய இருதரப்புக்கும் உத்தரவிட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். அதேபோல் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ராயபேட்டை காவல்துறை ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் அவரின் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், வைத்தியலிங்கம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அதேபோல் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் உள்ள ஓபிஎஸ்-ஐ திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் பாக்யராஜ், ''மீண்டும் எல்லாருமே ஒன்றுபட்டு பழையபடி, அவர் (எம்ஜிஆர்) எப்படி விட்டுட்டு போனாரோ அதே பலத்துடன், எம்ஜிஆர் ரசிகர்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் புத்துணர்ச்சி வரும் அளவிற்கு பலம் பெற வேண்டும். அதற்கு நானும் என்னை இணைத்துக்கொண்டு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட ரெடியாக இருக்கிறேன். முடிந்தால் எடப்பாடியை நேரில் சந்தித்து அனைவரும் இணைவதற்கு என்னால் முடிந்த முயற்சிகளை எடுப்பேன்'' என்றார்.