Skip to main content

ஒரே ஊரைச் சேர்ந்த வேட்பாளர்கள்; திமுக, அதிமுக நேரடி ஃபைட்...!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 Direct competition between DMK and AIADMK in Erode Parliamentary Constituency
ஆற்றல் அசோக்குமார் - கே.இ.பிரகாஷ்

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம். நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு மற்றும் மொடக்குறிச்சி என மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது ஈரோடு பாராளுமன்ற தொகுதி. விவசாயம் மற்றும் நெசவு சார்ந்த ஜவுளி தொழிலே இங்கு பிரதானம்.

திமுக சார்பில் கே.இ.பிரகாஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு சிவகிரி அருகே உள்ள கானியம்பாளையம் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தொடக்கம் முதலே திமுக இளைஞர் அணியில் ஒன்றிய மற்றும் மாவட்ட அமைப்பாளராகவும் தற்போது மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

திமுகவில் இளைஞர் அணிக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கை அடிப்படையில் ஈரோடு பிரகாசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொகுதி முழுக்க திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் வேட்பாளர் பிரகாசுக்கு நன்கு அறிமுகம் உள்ளது. எளிமையான அணுகுமுறையும், நிர்வாகத் திறமையும் கொண்டவர் என்பதால், தேர்தல் களத்தில் பிரகாஷின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக இருக்கும் என்கிறார்கள் திமுகவினர்.

அதிமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஆற்றல் அசோக்குமார். இவரும் சிவகிரி அருகே உள்ள கொடுமுடி புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். முன்பு ஈரோட்டை உள்ளடக்கிய திருச்செங்கோடு தொகுதியின் அதிமுகவின் முன்னாள் எம்பி ஆக இருந்த சவுந்திரம் தான் இவரது தாயார். அதேபோல் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்எல்ஏவான டாக்டர் சரஸ்வதியின் மருமகன் இவர். பாஜகவில் இருந்த அசோக்குமார் சென்ற சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார் அப்போது இவரது மாமியார் டாக்டர் சரஸ்வதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அதன்பிறகு எம்பி கனவில் ஈரோடு தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பத்து ரூபாய்க்கு சாப்பாடு, இலவசமாக கோயில் கட்டிடப் பணிகளை செய்து கொடுப்பது என பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்து தொகுதி முழுக்க தன்னை தானே அறிமுகம் செய்து வந்தார்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தவுடன் நேராக எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் அசோக்குமார்,. அப்போதே ஈரோடு தொகுதி உனக்கு தான் என எடப்பாடி உறுதி கொடுத்திருந்தாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த தொகுதி முழுக்க பல கோடி ரூபாய் வாரி இறைத்து தன்னை அறிமுகம் செய்து வைத்திருக்கிறாராம் அசோக்குமார். மேலும் 100 கோடி வரை செலவு செய்வேன் என தாராளம் காட்டி வருகிறாராம்

அசோக்குமார் அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டதால் அதிக மகிழ்ச்சி அடைந்திருப்பவர்கள் அதிமுகவை சேர்ந்த ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் தான். காரணம் இங்கே போட்டியிடுவதற்கு பெரும்பாலும் யாருக்குமே விருப்பமில்லை என்பதுதான். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு இத்தொகுதி ஒதுக்கப்படவுள்ளது இதில் வேட்பாளராக போட்டியிட இளைஞரணி மாநில தலைவர் யுவராஜாவை அடுத்து முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகரை அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கேட்டபோது, ஐயா ஆள விடுங்க... என ஓட்டம் பிடித்தார்களாம். அடுத்து வேறு வழியில்லாமல் செலவுக்கு பணம் கொடுத்து விடுவதாக உறுதி கூறப்பட்ட பிறகே அக்கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் விஜயகுமாரை வேட்பாளராக ஜிகே வாசன் சம்மதிக்க வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது

ஈரோடு தொகுதி போட்டிக்கான களம் என்பது திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் மத்தியில் என்ற வகையில் களம் மாறியுள்ளது. திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியாக இருந்த போது பேராசிரியர் அன்பழகன் ஒரு முறை போட்டியிட்டுள்ளார். அதன் பிறகு  ஈரோடு தொகுதியாக தொகுதி மறுசீரமைப்பில் வந்த பிறகு திமுக இங்கு நேரடியாக களம் காணவில்லை, சென்ற முறை ம.தி.மு.க. கணேச மூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றார். தற்போது தான் திமுகவை  சேர்ந்தவர் நேரடியாக களம் காண்கிறார். இது உடன்பிறப்புகள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது..

சார்ந்த செய்திகள்