Skip to main content

“பாஜக ஒரு பிராடு கட்சி...” -  ஜி. ராமகிருஷ்ணன் அதிரடி

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
CPM G Ramakrishnan comment on bjp

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி அளிப்பு கூட்டம் வேலூரில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார். 

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஜி. ராமகிருஷ்ணன், “இந்தியா கூட்டணியில் பல்வேறு கட்சிகளுக்கு மத்தியில் பல மாநிலங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று தேர்தல் பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வருமான வரி, மக்கள் குறை சட்டம், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சட்டம் என 5 சட்டத்தை திருத்தி தேர்தல் பத்திரத்தை உருவாக்கியது பாஜக. நிதி கொடுப்பது மூடு மந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த 5 சட்டத்தை திருத்தினார்கள்.

தேர்தல் பத்திர சட்டம் வாபஸ் தீர்ப்பு வந்த பிறகு தான் டெல்லியில் பாஜகவின் தேசிய கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் பத்திர சட்டம் ரத்து செய்யப்பட்டது சரி என்று ஒருவர் கூட வாய் திறக்கவில்லை. ஊழலை ஒழிப்பதாக சவடால் பேசும் பிரதமர் மோடி நாளை(4ம் தேதி) தமிழகம் வருகிறார். நீதிமன்றமே தேர்தல் பத்திர சட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும் எனக் கூறியுள்ள நிலையில் மோடி இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

சண்டிகர் மேயர் தேர்தலில் நடைபெற்ற முறைகேட்டு மோசடியின் தீர்ப்பு வந்த பிறகு பாஜக ஒரு பிராடு கட்சி என விமர்சிக்கப்படுகிறது. ஒன்றிய பாஜக அரசு கடந்த பத்து ஆண்டாக கொடுத்த வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல் ஒரு மோசடியான அரசை நடத்தி வருகிறது. பாஜகவை வீழ்த்தக்கூடிய பணியில் இந்தியா கூட்டணி ஈடுபட்டுள்ளது.

நதிநீர் பங்கிட்டு சட்டத்தையும் உச்சநீதிமன்ற சட்டத்தையும் கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகள் மீறி செயல்படுகிறது. கர்நாடகா மற்றும் ஆந்திராவில் அணை கட்டும் அந்தந்த அரசுகளை தடுத்து நிறுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தானி மட்டும் CPM பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்ற வட மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. கேரளாவில் பாஜக வெற்றி பெற முடியாது. இன்றைய சூழலில் தமிழகத்தில் எங்களுக்கு இரண்டு எண்ணிக்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் போட்டியிடுவோம் என ஓரிரு நாளில் பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவிக்கப்படும்.

தமிழகத்தில் பாஜக காலூன்றும் என்பதும், மோடியின் பேச்சும் நகைப்புக்குரிய பேச்சு. வாக்கு இயந்திரம் மூலம் முறைகேடு நடைபெறும் என்பதால் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த கூறுகிறோம். வாக்குப்பதிவை பொறுத்தவரைக்கும், முதலில் வாக்குப்பதிவு இயந்திரம் அடுத்து கண்ட்ரோல் யூனிட் மூன்றாவதாக தான் ஒப்புகை சீட்டு வர வேண்டும். ஆனால் இப்போது வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகை சீட்டு, கண்ட்ரோல் யூனிட் உள்ளது. ஒப்புகைச் சீட்டும் வாக்கு எண்ணும்போது டேலி ஆனால் தான் தேர்தல் முடிவு அறிவிக்க வேண்டும்” என ஜி. ராமகிருஷ்ணன் பேசினார். 

சார்ந்த செய்திகள்