Skip to main content

அப்போதே எச்சரித்திருந்தேன்... கரோனா நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்தக் கூடாது... அன்புமணி

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

corona virus


மருத்துவமனைகளில் போதிய இடவசதிகள் இல்லை, மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் போதிய அளவுக்கு இல்லை என்ற காரணத்தைக் காட்டி கரோனா தொற்று உள்ளவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருங்கள் என்று அனுப்பப்படுவதாகவும், சில மாவட்டங்களில் கரோனா பாதிக்கப்பட்டவர்களை பெயரளவுக்குப் பார்த்துவிட்டு வீட்டிலேயே தனி அறையில் இருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு அனுப்பி வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள், சிறிய வீட்டில் இருப்பவர்கள் எப்படித் தனி அறையில் இருக்க முடியும்? கழிவறை ஒன்று மட்டுமே உள்ள வீடுகளில் எப்படி அவர்களால் தனியாக இருக்க முடியும்? அப்படி இருந்தால் மற்றவர்களுக்கும் தொற்று பரவாதா? கரோனா வராமல் முன்னெச்சரிக்கை வேண்டுமானால் மேற்படி நீங்கள் சொன்னடி இருக்கலாம், கரோனா தொற்று வந்தவர்களை மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும், வசதி வாய்ப்புகள் குறைந்தவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் வேலைவாய்ப்பு வருமானம் இல்லாத இந்த நேரத்தில் மருத்துவமனையிலேயே இருந்தால்தான் மூன்று வேளையும் சத்தான உணவுகளைச் சாப்பிட முடியும், எனவே கரோனா தொற்று வந்தவர்களை மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 


இந்த நிலையில் கரோனா நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்தக் கூடாது, விரிவான சிகிச்சையளிக்க ஏற்பாடுகளைச் செய்ய வேணடும் என பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடின்றி அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் தங்கி மருத்துவம் பெற வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்றும்,  வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அனுப்பி வைக்கப்படுவதாகவும் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் மூலம் மேலும் பலருக்கு கரோனா வைரஸ் நோய்ப் பரவுவதற்கு மட்டுமே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி மொத்தம் 6,009 பேர் மட்டுமே கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். தமிழகத்தில் முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட  நாளில் இருந்து இரு மாதங்களில் 6,009 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில், அதாவது மே 8-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரையிலான காலத்தில் தமிழகத்தில் 25,658 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் இதே காலத்தில் 19,106 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. நேற்றுடன் முடிவடைந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை 4.20 மடங்கு அதிகரித்துள்ளது. இது மிகவும் அதிகம் ஆகும்.

தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் 3.21 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் கரோனா அதிகரிப்பு விகிதம் 6.27 மடங்காக உள்ளது. முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இதை நாம் தவிர்த்திருக்க முடியும். அதைச் செய்யத் தவறியதால் சென்னையில் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சும் அளவுக்கு கரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. இது ஒருபுறம் கவலையளிக்கும் நிலையில், மற்றொருபுறம் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சையளிப்பதில் கையாளப்படும் அணுகுமுறை கரோனா நோய்ப்பரவலை அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
 


சென்னையில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளிலும், கரோனா கவனிப்பு மையங்களிலும் உள்ள படுக்கைகள் முழுமையாக நிறைந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில், புதிதாக பாதிக்கப்படுவோரில் பெரும்பான்மையினருக்கு மருத்துவமனைகளில் பெயரளவுக்கு மருத்துவ ஆய்வுகள் செய்யப்பட்டு, சில மருந்துகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கூறி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவ்வாறு அனுப்பி வைக்கப்படுபவர்களில் பெரும்பான்மையினரின் வீடுகளில் நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைப்பதற்கான வசதிகள் இல்லை. அவர்கள் வீடுகளில் ஒரே கழிப்பறையைப் பயன்படுத்துதல், கழிப்பறை இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றால் கரோனா வேகமாகப் பரவுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்கு இது தான் முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவ்வாறு இருப்பவர்களால் நோய் பரவாது என்று கூறமுடியாது. கரோனா நோயைக் குணப்படுத்துவதற்கு வேண்டுமானால் சாதாரண மருந்துகளும், மருத்துவ ஆலோசனைகளும் போதுமானவையாக இருக்கலாம். ஆனால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கண்காணிப்புடன் கூடிய தனிமைப்படுத்துதல் கட்டாயமாகும். கரோனா நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அனுப்பி வைப்பதைக் கைவிட்டு, அவர்களை மருத்துவமனைகள் அல்லது கரோனா கவனிப்பு மையங்களில் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் வரை, சென்னையில் என்ன தான் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் நோய்த் தொற்றுகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது.
 

anbumani ramadoss


தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் இத்தகைய நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் ‘‘மின்னல் வேகத்தில் கரோனா: சிறப்பு மருத்துவமனைகள் அமைக்க வேண்டும்!’’ என்ற தலைப்பில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவலைத் தடுக்கும் வகையில் கரோனா நோயாளிகளுக்குத் தனி மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். சென்னையில் கரோனா சிகிச்சைக்கான வசதிகளுடன் தனி மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.  அதேபோல், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கரோனா சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தேன். இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நாளில் தமிழகத்தில் வெறும் 12 பேர் தான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று மதிப்பிட முடிந்ததால் தான் அப்போதே எச்சரித்திருந்தேன். மார்ச் 19, ஏப்ரல் 25 ஆகிய தேதிகளில் வெளியிட்ட அறிக்கைகளிலும் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கியிருந்தேன். அவற்றுக்கு செயல்வடிவம் தரப்பட்டிருந்தால் சென்னை மாநகரத்தில் இப்படி ஒரு மோசமான நிலைமை ஏற்பட்டிருந்திருக்காது.
 

http://onelink.to/nknapp


சீனாவில் கரோனா பாதிப்பு  ஏற்பட்டவுடன் உடனடியாக பல சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி ஹோட்டல்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு, கவனிப்பு மையங்களாக மாற்றப்பட்டன. அதனால் தான் அங்கு மிகவும் எளிதாக கரோனாவைக் கட்டுப்படுத்த முடிந்தது. சென்னையில் ஒரு சில கல்லூரிகளும், அரங்கங்களும் கவனிப்பு மையங்களாக மாற்றப்பட்டாலும் கூட அது போதுமானதாக இல்லை. சென்னையில் கல்லூரிகள், கல்லூரி விடுதிகள், திருமண அரங்கங்கள், கூட்ட அரங்குகள், உள்விளையாட்டு அரங்குகள் ஆகியவை ஏராளமாக உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு போதிய வசதிகளுடன் கூடிய கரோனா கவனிப்பு மையங்களாக மாற்ற வேண்டும்; போதிய அளவில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகளை வீட்டுக்கு அனுப்புவதைக் கைவிட்டு, பாதிக்கப்பட்ட அனைவரையும் மருத்துவமனைகள்/ கரோனா கவனிப்பு மையங்களில் சேர்க்க வேண்டும்.

அவ்வாறு உருவாக்கப்படும் கவனிப்பு மையங்களில் தரமான மருத்துவத்துடன், 3 வேளையும் சத்தான உணவுகளும், புரதத் துணைப் பொருட்களும் வழங்கப்பட வேண்டும். அடுத்த இரு மாதங்களுக்கு இத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலமே சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.