திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியானது கடந்த 2014ம் ஆண்டு தொடங்கியது. ரூ. 80 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கிய இந்த பணியானது, அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து கருமண்டபம், மத்திய பேருந்து நிலையம், எடமலைப்பட்டி புதூர், ரயில்வே ஜங்ஷன் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கான பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
ஆனால் சென்னை செல்வதற்கான, மன்னார்புரம்புரம் பகுதி பாலம் மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்து வந்தது. ராணுவத்திற்கு சொந்தமான 67 சென்ட் நிலம் பெறுவதில் சிக்கல் நீடித்ததால் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. இந்நிலையில் தற்போது, அந்த இடம் கிடைத்ததைத் தொடர்ந்து திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பணி துவங்கப்பட்டுள்ளது.
திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியை ஆய்வு செய்த பின்பு மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “எந்த ஒரு அரசும், சாம்ராஜ்யமும் நிலையாக தொடர்ந்து இருந்தது இல்லை. ராஜபக்சே சகோதரர்களை இலங்கை மக்கள் கொண்டாடினார்கள். இன்று அந்த மக்களுக்கு பயந்தே மஹிந்த ராஜபக்சே ஓடுகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். அண்ணாமலையைக் கேட்டுக்கொண்டு ஆட்சி நடத்த முடியாது. மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசாங்கம் முடிவெடுக்கும். அதை மக்கள் ஏற்பார்களே தவிர அண்ணாமலை எடுக்கும் முடிவை மக்கள் ஏற்க மாட்டார்கள். அண்ணாமலை பேசுவதை அவரே ரசித்துக் கொள்ள வேண்டியது தான்” என்றார்.