Skip to main content

“பாஜக ஆண்டது போதும்; மக்கள் மாண்டதும் போதும்” - முதல்வர் ஸ்டாலின்

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Chief Minister Stalin campaign in Tiruvannamalai in praise of BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தத் தேர்தல் களம் இரண்டாவது விடுதலை போராட்டம். இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்த இடம் திருவண்ணாமலை. திருவண்ணாமலையையும் திமுகவையும் பிரிக்க முடியாது. பாஜக ஆண்டது போதும்; அதனால் மக்கள் மாண்டதும் போதும். பாஜகவை இந்த முறை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.  பொய் புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் பிரதமர். இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும்.

பிரதமர் மோடி குழப்பத்தில் இருக்கிறார்; அவரது குழப்பம் ஜூன் மாதத்தில் தெரிந்துவிடும். சமீபத்தில் பிரதமரின் ஒரு பேட்டி பார்த்தேன். ஆனால் அதில் அரசின் சாதனையாக  எதையும் பிரதமர் கூறவில்லை. தமிழ்நாட்டுக்கு செய்த சிறப்பு திட்டம் என்ன என்று தொடர்ந்து கேட்கிறேன்; இதுவரை பிரதமர் கூறவில்லை.

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மோடி உருட்டுகிறார். தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி தர முடியாது என்று நக்கலாக பதில் சொன்னார் நிர்மலா சீதாராமன். மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியை நிர்மலா சீதாராமன் பிச்சை என கூறினார். வெள்ள சேதத்தை பார்வையிட நிர்மலா சீதாராமன் வந்தார்; ஆனால் நிதி வரவில்லை.  மக்களுக்கு வழங்கப்படும் வெல்ல நிவாரண நிதியை நிர்மலா சீதாராமன் பிச்சை என கூறினார்.

வெளிநாட்டு வங்கிகளில் மாநில அரசு வாங்கிய கடனை ஒன்றிய அரசு தந்ததாக நிர்மலா சீதாராமன் பொய் சொன்னார். ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கந்து வட்டிக்காரர் போல் கணக்கு கேட்கிறார் நிர்மலா சீதாராமன். பிரதமர் மாதிரியே நிமலா சீதாராமனும் வாயாலேயே வடை சுடுகிறார்.

தேசிய பேரிடர் நிதியில் இருந்து 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கேட்டோம். கரகாட்டக்காரன் பட வாழைப்பழ காமெடி போல என்டிஆர்எப் நிதியை கேட்டால் எஸ் டி ஆர் எஃப் நிதியை கொடுத்து  இதுதான் என்கிறார். பேரிடர் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் என்டிஆர்எப் ஒதுக்கப்பட வேண்டும். மத்திய அரசிடம் பணம் உள்ளது; ஆனால் தமிழ்நாட்டிற்கு கொடுக்கத்தான் அவர்களுக்கு மனமில்லை. மத்தியில் ஜனநாயகம் மலர இந்தியா கூட்டணிக்கு வாக்களிங்கள். நாடும் நமதே நாற்பதும் நமதே” என்றார்.

சார்ந்த செய்திகள்