Skip to main content

முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம்... வேட்புமனு அஃபிடவிட்டில் தகவல்!

Published on 16/03/2021 | Edited on 16/03/2021

 

Chief Minister Edappadi Palanisamy does not even own a car ... Information in the nomination affidavit!

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சொந்தமாக கார் உள்ளிட்ட எந்த ஒரு மோட்டார் வாகனங்களும் இல்லை என்று வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள அஃபிடவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தல், வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கு குறுகிய அவகாசமே உள்ள நிலையில், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளும், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட பிற கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.

 

இதற்கிடையே, மார்ச் 12ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியிருந்தன.

 

இந்நிலையில், சுப முகூர்த்த நாள் என்பதால் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் நேற்று (மார்ச் 15) வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி, எடப்பாடி தொகுதியில் 7வது முறையாக போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் கட்சியினர் சகிதமாக ஆரவாரத்துடன் சென்று மனுத்தாக்கல் செய்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ எந்தவித ஆரவாரமுமின்றி, உறவினர்கள், கட்சிக்காரர்களின்றி தனி ஆளாக நடந்து சென்று மனுத்தாக்கல் செய்தார்.

 

வேட்பாளர்கள், மனுத்தாக்கலின்போது சொத்து விவரம் குறித்த சுய உறுதிமொழி பத்திரமும் (அஃபிடவிட்) தாக்கல் செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அஃபிடவிட்டில், அவர் பெயரிலோ, அவருடைய மனைவி ராதாவின் பெயரிலோ மோட்டார் வாகனங்கள், வானூர்திகள், கப்பல், படகுகள் உள்ளிட்ட எந்த ஒரு போக்குவரத்து வாகனமும் சொந்தமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நடப்பு 2021 மார்ச் 15ஆம் தேதி நிலவரப்படி, எடப்பாடி பழனிசாமி பெயரில் அசையும் சொத்துகள் 2.02 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே கடந்த 2016ஆம் ஆண்டு 3.14 கோடி ரூபாயாக இருந்தது. அசையா சொத்துகளின் மதிப்பு நடப்பு ஆண்டில் 4.68 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த தேர்தலின்போது 4.66 கோடி ரூபாயாக இருந்தது.

 

கடந்த 2016ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி பெயரில் 33.73 லட்சம் ரூபாய் கடன் இருந்தது. தற்போது அவருடைய கடன் சுமை 29.75 லட்சமாக சற்று குறைந்துள்ளது. கடந்த தேர்தலின்போது அவர் தன் பெயர், மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா ஆகியோர் பெயரில் சொத்து விவரங்களை தாக்கல் செய்திருந்தார். இந்தமுறை அவர் தன் பெயர், மனைவி பெயர் மற்றும் இந்து கூட்டுக்குடும்பம் ஆகிய பெயர்களில் இந்த விவரங்களை தாக்கல் செய்திருந்தார்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தற்போது கையில் 6 லட்சம் ரூபாய் ரொக்கமும், மனைவியிடம் 6 லட்சமும், இந்து கூட்டுக்குடும்பத்தில் 11 லட்சம் ரூபாய் ரொக்கமும் உள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் 4.20 லட்சம் ரூபாய்க்கு நகைகளும், மனைவியிடம் 30.20 லட்சம் ரூபாய்க்கு நகைகளும் உள்ளதாக உறுதிமொழி ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

 

அசையா சொத்து இனங்களைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி பெயரில் எதுவும் இல்லை. அதேநேரம் மனைவி ராதாவின் பெயரில் 1.78 கோடி ரூபாய்க்கு அசையா சொத்துகள் உள்ளன. இந்து கூட்டுக்குடும்பம் கணக்கில் 2.90 கோடி ரூபாய்க்கு அசையா சொத்துகள் உள்ளன. அதேபோல் மனைவியின் பெயரிலும் 14.75 லட்சம் ரூபாய்க்கு கடன் உள்ளது. இவ்வாறு அஃபிடவிட்டில் கூறப்பட்டுள்ளது.

 

வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையிலும் ஈடுபட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்