Skip to main content

ஐ.பி.செந்தில்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள்!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021
AIADMK councilors join DMK in presence of IP Senthilkumar

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றிய குழு கூட்டத்திற்கு போதிய கவுன்சிலர்கள் வராததால் கோரம் இல்லாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. நிலக்கோட்டை ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ரெஜினா நாயகம் உள்ளார். துணைத் தலைவராக அதிமுக ஒன்றியச் செயலாளராக யாகப்பன் இருந்து வருகிறார். ஒன்றிய குழு சாதாரண கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் நேற்று திடீரென சுயேட்சை கவுன்சிலர் ராஜதுரை, பாமக கவுன்சிலர் நாகராஜ் ஆகியோர் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

 

மேலும் அதே நிகழ்வில் அதிமுக ஒன்றிய குழு தலைவர் ரெஜினா நாயகம் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் தங்களுக்கு தேவையான நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டிய அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் பாலமுருகன், விஜி, சுகந்திர தேவி ஆகிய 3 பேரும் தங்கள் பகுதிக்கு நலத்திட்டங்கள் வந்து சேர்ந்திட வருங்காலங்களில் திமுகவிற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரினை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். திமுக கவுன்சிலர்கள் 6 பேர் மற்றும் திமுகவுக்கு புதியதாக ஆதரவு அளித்த 5 பேர் என 11 பேர் ஒன்றிய குழு கூட்டத்துக்கு வராமல் புறக்கணித்ததால் கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும்  கூட்டத்தை நடத்த முடியாமல் அதிமுக ஒன்றிய குழு தலைவர் ரெஜின நாயகம் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறிச் சென்றனர். 


 

சார்ந்த செய்திகள்