Skip to main content

அதிமுக வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. சமாதானம் செய்தவர் யார் தெரியுமா?

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

AAndipatti ADMK candidate logirajan

 

ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள கடமலை - மயிலை ஒன்றியத்தில் 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் 14 ஊராட்சி மன்றத் தலைவர்கள், நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக தேனி மாவட்ட துணைச் செயலாளர் முருக்கோடை ராமர் போட்டியிட வேண்டும் என விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் ஆண்டிபட்டி தொகுதியில் இதற்கு முன்பு போட்டியிட்டு தோல்வியடைந்த லோகிராஜனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால் முருக்கோடை ராமருக்கு ஆதரவாக விருப்ப மனு அளித்திருந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். 

 

இதனால் ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளருக்குப் பின்னடைவு ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து நேற்று (14.03.2021) முருக்கோடை ராமர், அதிருப்தியில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது “அதிமுக தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக வெற்றிக்குத் தேவையான பணிகளைத் துரிதமாக செய்ய வேண்டும்” என அறிவுறுத்தினார்.

 

இந்தக்  கூட்டத்தின்போது மாவட்ட அரசு வழக்கறிஞர் டி.கே.ஆர். கணேசன், அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களிடமும் பேசுகையில், “ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட முருக்கோடை ராமருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அவருக்கு மாவட்ட அளவிலான முக்கிய பொறுப்புகள் வழங்க உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தேனி எம்.பி. ரவீந்தரநாத் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்” எனத் தெரிவித்தார். 

 

இதனையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரும் சமரசம் அடைந்தனர். அதன்பின்னர் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே கடமலை - மயிலை ஒன்றியத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்திப்பதற்காக வந்திருந்த அதிமுக வேட்பாளர் லோகிராஜன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது வேட்பாளருக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இந்தக் கூட்டத்தின்போது ஊராட்சி மன்றக் கூட்டமைப்பு தலைவர் மாயகிருஷ்ணன், செயலாளர் பூங்கா காத்தமுத்து, பொருளாளர் சுப்பிரமணியன், சந்திராதங்கம் ராமுத்தாய்ராஜா, பார்வதி அன்பில் சுந்தரபாரதம் உள்ளிட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்