புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநருக்குமான பணிப்போர் முற்றியுள்ளது. கடந்த 4 நாட்களாக முதலமைச்சர் கெஜ்ரிவால் , அமைச்சர்கள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு துணை நிலை ஆளுநரை கொண்டு தொல்லை கொடுத்து வருகின்றது.
டெல்லியில் உள்ள துணைநிலை ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆளும் அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கு மத்திய மோடி அரசு தூண்டுகோலாக உள்ளது. டெல்லி அரசை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு புதுச்சேரி மாநிலமும் விதிவிலக்கல்ல. டெல்லிக்கும், புதுச்சேரிக்கும் மத்திய அரசு துணை நிலை ஆளுநரை கொண்டு அழுத்தம் கொடுத்து வருகிறது.
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம். புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கொடுக்க வலியுறுத்தி வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். சிறப்பு மாநில அந்தஸ்து கிடைத்தால் துணைநிலை ஆளுநரின் ஆட்டங்களுக்கு முடிவு கட்டப்படும். இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
அவரிடம் "டெல்லியில் முதலமைச்சர் போராடுவது போல புதுச்சேரியிலும் நடத்தப்படுமா...?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு " நாகரீகம் கருதி அமைதியாக உள்ளோம். எங்களுடைய பொறுமையை சோதித்தால்
டெல்லியை போன்று துணைநிலை ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம்" என்று நாராயணசாமி தெரிவித்தார்.